இலங்கை அரசின் செயற்பாடுகள் தொடர்பில் மனித உரிமை கண்காணிப்பகம் அறிக்கை!

0
106

சிறுபான்மை சமூகத்தினருக்கு எதிரான பாரபட்ச கொள்கைகளை, அரசாங்கம் தொடர்ந்தும் பின்பற்றுகின்றது என, சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்காக, இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள், மக்களின் உரிமைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக, சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

2024 ஆம் ஆண்டின் அறிக்கையில், இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘அரசாங்கத்தின் ஒடுக்குமுறை கொள்கைகளும் பலவீனமான சமூக பாதுகாப்பும், பலருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நிலையை உருவாக்கியுள்ளன.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம், தொடர்ந்தும் கருத்து வெளிப்பாட்டு சுதந்திரம், ஒன்றுகூடுவதற்கான சுதந்திரம் ஆகியவற்றை ஒடுக்கி வருகின்றது. அத்துடன், சிறுபான்மை சமூகத்தினருக்கு எதிரான பாரபட்ச கொள்கைகளை, அரசாங்கம் தொடர்ந்தும் பின்பற்றுகின்றது.
மில்லியன் கணக்கான மக்கள், பொருளாதார நெருக்கடியில் இருந்து தப்புவதற்காக போராடுகின்றனர். இதற்கு ஊழலும் பொறுப்புக்கூறாத ஆட்சியுமே காரணம்.
வறிய நிலையில் உள்ளவர்கள் மீது, கடும் தாக்கத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் மூலம், தற்போதைய அரசாங்கம் பதில் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது.
17 வீதமான மக்கள், ஒரளவு அல்லது கடும் உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்நோக்கும் நிலை காணப்படுகின்றது. இலங்கையின் வடக்கு- கிழக்கில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பத்தவர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், அரசாங்கத்தின் கண்காணிப்பையும் மிரட்டல்களையும் தொடர்ந்தும் எதிர்நோக்குகின்றனர். ஆலயங்கள் உட்பட, தமிழ் முஸ்லிம் மக்களின் சொத்துக்களை இலக்கு வைக்கும் காணி அபகரிப்பு கொள்கையை, அரசாங்க அமைப்புகள் முன்னெடுக்கின்றன’ எனவும் சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது.