இலங்கை இந்திய மீனவர்களிடையே நீண்டகாலமாக இடம்பெற்றுவரும் இழுவை மடிப் படகுகளின் பிரச்சினை தொடர்பான பேச்சுவார்த்தை கச்சதீவில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நேற்று இடம்பெற்றது.
இதன்போது இந்தியாவிலிருந்து வருகை தந்த மீனவப் பிரதிநிகள், கட்சிசார் பிரதிநிகள் மற்றும் அமைச்சர் உட்பட பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டோருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.
பேச்சுவார்த்தையில் இந்திய மீனவ பிரதிநிதிகள் தரப்பில் இலங்கை கடற்பரப்பிற்குள் இழுவை மடியினை விடுத்து பிறதொழில்களுக்கு தம்மை அனுமதிக்க வேண்டும் எனவும், தமது படகுகள் விடுவிக்கப்படவேண்டும் என்பதோடு மனித உரிமைசார் அடிப்படையில் கூலிக்காக வரும் மீனவர்களை கைதுசெய்யாது விடுவிக்கவேண்டும் எனவும் தெரிவித்தனர்.
இங்கு கருத்து தெரிவித்த இலங்கை மீனவர்கள் ’20 வருடங்களாக உங்களுடன் பேசி வருகின்றோம். எந்தவித பிரயோசனமும் இல்லை எங்கள் நிலைமைகளைப் புரிந்துகொள்ளுங்கள், இலங்கை மீனவர்களாக இந்திய மீனவர்களை எக்காரணம் கொண்டும் இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைய அனுமதிக்கமாட்டோம்’ என்றும் தமக்குரிய தீர்வு ஒரு கிழமைக்குள் வழங்கப்படாவிடின் அமைச்சரதும், இந்திய துணைத்தூதுவரதும் காரியாலயத்தை முற்றுகையிட்டு போராட்டம் செய்வோம் எனவும் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.
இருதரப்பு கருத்துக்களையும் கேட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, எதிர்வரும் செவ்வாய்க்கிழமை இங்கு கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பாக அமைச்சரவையில் கலந்துரையாடுவதாக தெரிவித்து, பேச்சுவார்த்தையை நிறைவுறுத்தினார்.
நேற்றைய பேச்சுவார்த்தையில் மன்னார், கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களுக்கான நீரியல் வள திணைக்கள உதவிப் பணிப்பாளர்கள், வடமாகாண கடற்படை தளபதி அனுர தென்னகோன், இந்தியா பா.ஜ.க- தமிழக மீனவ தலைவர் எம்.சி.முனுசாமி உட்பட்ட மீனவப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
![](https://eelanadu.lk/wp-content/uploads/2023/03/Fishermens-Problems-1024x546.jpg)
![](https://eelanadu.lk/wp-content/uploads/2023/03/Fishermens-Problems-2-1024x545.jpg)
![](https://eelanadu.lk/wp-content/uploads/2023/03/Fishermens-Problems-4-1024x539.jpg)
![](https://eelanadu.lk/wp-content/uploads/2023/03/Fishermens-Problems-5-1024x516.jpg)
![](https://eelanadu.lk/wp-content/uploads/2023/03/Fishermens-Problems-6-1024x533.jpg)
![](https://eelanadu.lk/wp-content/uploads/2023/03/Fishermens-Problems-7-1024x519.jpg)