இளம் தொழில்முனைவோருக்கு 5.5% என்ற மிகக் குறைந்த வட்டியிலான கடன்!

0
237

இளைஞர் நிதியமொன்றை ஸ்தாபிப்பதன் மூலம் சிறு வர்த்தகர்களுக்கு கடன் நிவாரணம் பெற்றுக்கொடுப்பதற்கும், மோசமான ஆவணங்களினால் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முடியாதுள்ள தரப்பினருக்கும் கடன்களை பெற்றுக் கொடுத்து அவர்களது வர்த்தகம் மற்றும் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்கும் விரைந்து தீர்வை பெற்றுக் கொடுப்பதற்கு எதிர்பார்ப்பதாக சமூக உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டுக் குழுவின் தலைவரும், இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

25 மாவட்டங்களிலும் செயற்படுத்தப்பட்டுவரும் ´கிராமிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் தேசிய வேலைத்திட்டத்தின்´ மற்றுமொரு நிகழ்ச்சித்திட்டம் நேற்று (09) வவுனியா மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டுக் குழுவின் தலைவரும், இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சருமான நாமல் ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது இளைய சமுதாயத்தினர் மத்தியில் காணப்படும் பிரச்சினைகளை முறையாக அடையாளங்கண்டு தீர்வை பெற்றுக் கொடுப்பதுடன், அவர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பது தொடர்பிலும் கவனத்திற் கொள்ளப்பட்டது.

இளைய சமுதாயத்தினர் மத்தியில் விவசாயத்தை ஊக்குவித்தல், சங்கீதம் மற்றும் கலையை ஊக்குவித்தல், இளைஞர் யுவதிகளின் திறமைகளை அடையாளங்கண்டு அவர்களை முறையாக வழிநடத்துதல், சுவசக்தி கடன் திட்டத்தின் கீழ் குறைந்த வட்டி (5.5%) வீதத்தில் கடன் பெற்றுக் கொடுத்து அவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்கு ஆதரவளித்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.

கிராம மட்டத்தில் தொழில்முறை விளையாட்டு வீரர்களை உருவாக்குவதுடன், கஷ்டப் பிரதேசங்களில் உள்ள திறமை வாய்ந்த விளையாட்டு வீரர்களை சர்வதேச அளவிலான விளையாட்டு வீரர்களாக அடையாளப்படுத்துவதற்கு அவர்களை ஊக்குவிப்பது தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

கஷ்ட பிரதேசங்களிலுள்ள பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை மிகவும் அதிகமாகக் காணப்படுவதாக அதிகாரிகளினால் சுட்டிக்காட்டப்பட்டதை தொடர்ந்து, குறித்த பிரச்சினை தொடர்பில் விரைந்து தீர்வை பெற்றுக் கொடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.

விசேட தேவையுடைய சுமார் 12 ஆயிரம் பிள்ளைகள் இம்மாவட்டத்தில் காணப்படுவதால், அவர்கள் கல்வி கற்கக்கூடிய கல்வி நிலையமொன்று அங்கு இல்லாமை குறித்து இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது. அது தொடர்பில் உரிய வேலைத்திட்டமொன்றை தயாரித்து அதனை செயற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் இதன்போது அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

இந்நாட்டின் வங்கி முறைமை சிறு வர்த்தகர்களை புறக்கணித்து, பாரியளவிலான வர்த்தகர்களுக்கு தேவையற்ற வகையில் உதவியளித்து வருவதாக இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன், எதிர்காலத்தில் அந்த வங்கி கலாசாரத்தை மாற்றுவது தொடர்பிலும் இதன்போது விவாதிக்கப்பட்டது.

குறித்த சந்தர்ப்பத்தில் வட மாகாண ஆளுநர் திருமதி.பி.எச்.எம்.சார்ள்ஸ், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவர்கள், சமூக உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு குழுவின் இராஜங்க அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.