சர்வதேச எயிட்ஸ் தினத்தை முன்னிட்டு கல்முனை பிராந்திய எயிட்ஸ் தடுப்புப் பிரிவு ஏற்பாடு செய்த நடைபவனியும் விழிப்புணர்வு செயலமர்வும் நடைபெற்றன.
கல்முனை பிராந்திய எயிட்ஸ் தடுப்புப் பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி ஐ. எல். ஜலால்டீனால் ஒருங்கிணைப்பு செய்யப்பட்ட இந்த நிகழ்வுகள் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் திருமதி சகீலா இஸ்ஸதீன் தலைமையில் நடைபெற்றன.
“உரிமைப் பாதையில் செல்” எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற இந்த நிகழ்வில் வைத்திய அத்தியட்சகர்கள், பிரதேச செயலாளர்கள், வலயக்கல்வி பணிப்பாளர்கள், பிராந்திய பிரிவு தலைவர்கள், சுகாதார வைத்திய அதிகாரிகள், பிராந்திய சுகாதார நிறுவனங்களின் பொறுப்பு வைத்திய அதிகாரிகள், மாவட்ட எயிட்ஸ் தடுப்பு குழு உறுப்பினர்கள், சுகாதார திணைக்கள உத்தியோகத்தர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது, பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் சகீலா இஸ்ஸதீன், பிராந்திய பாலியல் எயிட்ஸ் தடுப்புப் பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி ஐ. எல். ஜலால்டீன், சம்மாந்துறை மேலதிக சுகாதார வைத்திய அதிகாரி எம். ஏ. எம். ஹில்மி ஆகியோர் விளக்கவுரையாற்றினர்.
சர்வதேச எயிட்ஸ் தினம் ஆண்டுதோறும் டிசெம்பர் முதலாம் திகதி கடைப்பிடிக்கப்படுகிறது.
உலகம் முழுவதும் எயிட்ஸ் நோயைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், எச். ஐ. வியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிக்கும் நோக்கிலும் அதனால் உயிரிழந்தவர்களை நினைவு கூறும் வகையில் இத்தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.