கொரோனா வைரஸ் ஒழிப்புக்காக அரசாங்கம் முன்னெடுத்து வரும் திட்டத்தில் எந்தவித வெளிப்படைத் தன்மையும் இல்லையெனக் குற்றஞ் சாட்டியுள்ள ஐக்கிய தேசியக் கட்சி, பெரும் தொகையும் மாயமாகியுள்ளது எனத் தெரிவித்துள்ளது.
குறிப்பாக உரிம வகையில் சுகாதார வசதிகளை வழங்க அரசாங்கம் தவறியிருப்பதோடு, வெளிநாட்டு நிதி உதவிகள் தொடர்பான விடயத்திலும் அரசாங்கம் வெளிப்படைத் தன்மையுடன் செயற்படவில்லை எனவும் அக்கட்சி சாட்டியுள்ளது
இவ்வாறான நிலைமை காரணமாக நாட்டு மக்களின் உயிர் பாதுகாப்பு அவதானமான நிலையில் உள்ளதெனவும் ஐக்கிய தேசியக் கட்சி விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
“சுகாதார துறை அதிகாரிகள் கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதென கூறினாலும், தற்போதைய பாரதூரமான நிலவரம் வெளிப்படையாக ஆரம்பித்துள்ளது” என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, வெட்டலேட்டர் கருவிகளை கடந்த மார்ச் மாதத்திலிருந்து அரசாங்கம் கொள்வனவு செய்யவில்லையென தெரியவந்துள்ளதோடு, அவசர சிகிச்சை பிரிவில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக வெறுமனே 146 கட்டல்கள் மாத்திரமே ஒதுக்கப்பட்டுள்ளன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்படி, இயந்திரங்கள் போதுமானவை அல்லவென்றும் , அதனை விடவும் கொரோனா வைரஸ் ஒழிப்புக்காகவும் மக்களுக்கு சலுகைகளை வழங்கவும் வெளிநாட்டு உதவித் தொகைகளுக்கு என்ன நடந்தது என்பது கேள்விக்குறியாகவே உள்ளது என்றார்.
மேற்படி, உதவித் தொகைகள் தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சி பல முறை கேள்வி எழுப்பினாலும் அரசாங்கம் அதற்கான பதிலை வழங்க தவறிவிட்டதெனவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் தற்போது மேல் மாகாணத்துக்கு ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள போதும் அங்கிருந்து 500 பேர் வெளிமாவட்டங்களுக்கு சென்றுள்ளதாக தெரிவித்துள்ள ஐக்கிய தேசியக் கட்சி, அவர்களை கண்டறிய எவ்விதமான செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறது என்பதை மக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டுமெனத் தெரிவித்தார்.
அதனால், கொரோனா வைரஸ் தடுப்புக்காக அரசாங்கம் எவ்வகையான வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகிறது என்பதையும் வெளிப்படையாக அறிவுறுத்துமாறு கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.