சஜித் பிரேமதாசவின் நிபந்தனைகளை கோட்டாபய ராஜபக்ஷ் ஏற்றுக்கொள்ள மறுத்ததாலேயே பிரதமர் பதவியை சஜித் பிரேமதாச ஏற்க மறுத்துவிட்டார் ஆனால் ரணில் விக்ரமசிங்க நிபந்தனை இல்லாமல் ஏற்றுக்கொண்டுள்ளதால் இன்று திருடர்களுடன் இணைந்துசெயற்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
மாவனெல்லை பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அநுராதபுரத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில், பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ளாமல் சஜித் பிரேமதாச ஏன் தப்பிச்சென்றார் என்ற கேள்விக்கு பதிலளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
மக்கள் போராட்டம் காரணமாக நாட்டின் பிரதமராக இருந்த மஹிந்த ராஜபக்ஷ் பதவி விலகினார்.
அதனால் பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு சஜித் பிரேமதாசவுக்கு அழைப்பு விடுத்தபோது, சஜித் பிரேமதாச 2022.05.12ஆம் திகதி கோட்டாபய ராஜபக்ஷ்வுக்கு அது தொடர்பில் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.
குறித்த கடிதத்தில் பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்வதாக இருந்தால் அதற்கு சில நிபந்தனைகளை விதித்திருந்தார்.
குறிப்பாக குறித்த காலத்துக்குள் ஜனாதிபதி தேர்தலை நடத்த வேண்டும்.
2 வாரங்களுக்குள் 19ஆம் திருத்தத்தை மீண்டும் கொண்டுவர வேண்டும் போன்ற நிபந்தனைகளை தெரிவித்திருந்தார்.
இந்த நிபந்தனைகளை கோட்டாபய ராஜபக்ஷ ஏற்றுக்கொள்ள மறுத்ததாலேயே சஜித் பிரேமதாச அன்று பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ள மறுத்தார்.
ஆனால் ரணில் விக்ரமசிங்க எந்த நிபந்தனையும் இல்லாமல் பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்டார்.
அதனால்தான் இன்று அவர் திருடர்களுடன் இணைந்து செயற்பட வேண்டி ஏற்பட்டுள்ளது.
அன்று சஜித பிரேமதாச அரசாங்கத்தை ஏற்றுக்கொண்டிருந்தால், இந்த நிலையே ஏற்பட்டிருக்கும்.
அப்படியானால் சஜித் ராஜபக்ஷ என்றே மக்கள் தெரிவித்திருப்பார்கள்.
அதனால் சரியான தீர்மானம் எடுத்த சஜித் பிரேமதாசவை எதிர்வரும் செப்டம்பர் 21ஆம் திகதி மக்கள் ஆணையுடன் ஜனாதிபதியாக்குவோம்.
மேலும் இயலும் சிறிலங்கா என ரணில் விக்ரமசிங்க தெரிவித்து வருகிறார்.
இலங்கைக்கு இயலும் என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.
ஆனால் ரணிலால் முடியாது.
ஏனெனில் 1994ஆம் ஆண்டு ஐக்கிய தேசிய கட்சியை ரணில் விக்ரமசிங்க பொறுப்பேற்கும்போது 94 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தார்கள்.
ஆனால் அது படிப்படியாக குறைவடைந்து, கடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஒரே ஒரு தேசிய பட்டியல் உறுப்பினர் மாத்திரமே கிடைத்தது.
ஐக்கிய தேசிய கட்சியை அவர் அழித்துவிட்டார்.
அதனாலே அவரால் முடியாது என்கிறோம்.
அதேபோன்று 2005 இல் தோல்வியடைந்து, 2010இல் சரத் பொன்சேகாவை ஜனாதிபதி வேட்பாளராக நியமித்து ஒதுங்கி இருந்தார்.
அதேபோன்று 2015இல் மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி வேட்பாளராக நியமித்து ஒதுங்கி இருந்தார்.
2020ல் சஜித் பிரேமதாசவை நியமித்து, அவரை வெற்றிபெறச் செய்யாமல் காலை வாரினார்.
அதனால் இலங்கையால் முடியும் ஆனால் ரணிலால் முடியாது என்கிறோம்.