சீன முதலீட்டாளர்களுக்கு, ஜனாதிபதி அநுர அழைப்பு!

0
17

நிலையான, வலுவான ஆட்சி மற்றும் வெளிப்படைத்தன்மையுள்ள பொருளாதாரத்தைக் கொண்ட இலங்கையில் முதலீடு செய்ய வருமாறு, சீன முதலீட்டாளர்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அழைப்பு விடுத்தார்.

அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்த முதலீட்டு அமர்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட போதே
ஜனாதிபதி இந்த அழைப்பை விடுத்தார்.

சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் அவர்களின் அழைப்பின் பேரில் நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சீனா சென்றுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று காலை அரச மற்றும் தனியார் துறை முதலீட்டு அமர்வில் பங்கேற்றார்.

சீனா டியான்யிங் இன்கோபரேசன், சீன ஹார்பர் பொறியியல் நிறுவனம், சீன தொலைத் தொடர்பு நிர்மாண கம்பெனி லிமிடெட், சீனா பெட்ரோ கெமிக்கல் கூட்டுத்தாபனம், மெடலர்ஜிகல் கோபரேசன் ஒப் சைனா நிறுவனம், சீன சிவில் பொறியியல் நிர்மாணக் கூட்டுத்தாபனம், சீனா எனர்ஜி இன்டர்நெசனல் குழும நிறுவனம், குவாங்சு பொதுப் போக்குவரத்து குழுமம் உட்பட பல முன்னணி சீன நிறுவனங்கள் இந்த முதலீட்டு அமர்வில் பங்கேற்றன.

அந்த நிறுவனங்களின் தலைவர்களுடன் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சுமுகமான கலந்துரையாடல்களில் ஈடுபட்டார்.

இந்த நிகழ்வில் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க, இலங்கைக்கான சீனத் தூதர் சீ ஜென்ஹோங், சீனாவிற்கான இலங்கைத் தூதர் மஜிந்த ஜெயசிங்க ஆகியோரும் கலந்து கொண்டனர்.