சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு புதிய உறுப்பினர்களை தெரிவு செய்யத் தீர்மானம்

0
147

தேர்தல் ஆணைக்குழு உள்ளிட்ட சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு புதிய உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு நேற்று முதன்முறையாகக் கூடிய அரசமைப்பு பேரவை தீர்மானித்துள்ளது. தேர்தல் ஆணைக்குழு, பொதுச் சேவை ஆணைக்குழு தேசிய பொலிஸ் ஆணைக்குழு, கணக்காய்வு சேவை ஆணைக்குழு, மனித உரிமைகள் ஆணைக்குழு, இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு, நிதி ஆணைக்குழு, எல்லை நிர்ணய ஆணைக்குழு, தேசிய கொள்முதல் ஆணைக்குழு ஆகியவற்றுக்கு புதிய உறுப்பினர்களை நியமிக்க விண்ணப்பம் கோருவது என்றும் அது தொடர்பில் வர்த்தமானி வெளியிடப்படும் எனவும் நேற்றைய கூட்டத்தில் முடிவு எட்டப்பட்டது. சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் நடைபெற்ற இந்தக் கன்னி அமர்வில், பிரதமர் தினேஷ் குணவர்த்தன, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ, பாராளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம், கலாநிதி பிரதாப் இராமானுஜம், கலாநிதி அனுலா விஜயசுந்தர, கலாநிதி தினேஷா சமரத்ன ஆகியோர் பங்கேற்ற நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசீம் பங்கேற்கவில்லை. மேலும், இந்தக் கூட்டத்தில் அரசமைப்பு பேரவையின் எதிர்கால செயற்பாடுகள் குறித்தும் பேசப்பட்டன. அத்துடன், பேரவையின் கடமை மற்றும் செயற்பாடுகளை சுதந்திரமானதாகவும் பொறுப்புணர்வுடனும் வெளிப்படையாகவும் செயற்படுத்த பேரவை ஏகமனதாக ஏற்றுக்கொண்டது.