28 C
Colombo
Sunday, September 15, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

துமிந்த சில்வா மனுவிலிருந்து நான் விலகுகிறேன் – மனோ கணேசன்

துமிந்த சில்வாவின் விடுதலை மனுவில் நான் இட்ட கையெழுத்தை அகற்றிகொண்டு வாபஸ் பெறுகின்றேன். அதேபோல், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை வேண்டி அரசாங்கத்தினதும், தெற்கின் சிங்கள மக்களின் கவனத்துக்கு கொண்டு செல்ல நான் மேற்கொள்ளும் முயற்சி, தவறாக புரிந்துக்கொள்ளப்படுவது தொடர்பில், நான் மிகவும் மனம் நொந்து போயுள்ளேன் என்பதையும் தெரிவிக்கின்றேன்.

மேற்கண்டவாறு பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
அதுதொடர்பாக அவர் இன்று நடாத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் மேலும் தெரிவித்ததாவது:-

”புதிய அரசாங்கத்துக்கு மக்கள் பெரும்பான்மை பலத்தை பெற்றுக்கொடுத்துள்ளார்கள். இதை பயன்படுத்தி, மிருசுவில் கிராமத்தில், கொலை குற்றம் புரிந்த இராணுவ சிப்பாய்க்கு பொது மன்னிப்பை, இன்றைய அரசு கொடுத்துள்ளது. அதற்கு தேவையான மக்கள் ஆணையை, தேர்தல் விஞ்ஞாபனத்தில் தாம் பெற்றுக்கொண்டதாக அரசாங்கம் கூறுகிறது. அதேபோல், கடந்த ஆட்சியின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ரோயல் பார்க் குடியிருப்பில், கொலைகுற்றம் புரிந்து, சிறையில் இருந்த நபருக்கு, பொது மன்னிப்பு அளித்து விடுதலை வழங்கினார். இந்த பின்னணியில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவை விடுதலை செய்யும்படி கோரி பாராளுமன்ற உறுப்பினர்கள் 150 பேருக்கு குறையாதோரின் கையெழுத்தில், மனு ஒன்று சமர்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஆவணத்தில் நான் கையெழுத்திட்டது, இதன் மூலம் ஏற்படும் பிரச்சாரத்தை பயன்படுத்தி, தசாப்தகாலமாக சிறைவாசம் அனுபவிக்கும் 100 பேருக்கு குறைவில்லா தமிழ் அரசியல் கைதிகளின் நிர்க்கதி நிலைமையை நாட்டின் கவனத்துக்கு கொண்டு வரவே ஆகும். தமிழ் அரசியல் கைதிகளுக்கு கிடைக்க வேண்டிய நீதி, இதுவரைக்கும் நாட்டின் கவனத்துக்கே வரவில்லை. எனது முயற்சி, நாட்டின் தேசிய மட்டத்தின் கவனத்துக்கு இதை கொண்டு வந்து, அவர்களின் விடுதலைக்கு வழி தேடுவதாகும்.துமிந்த சில்வா மனுவில் நான் கையெழுத்திட்ட பின்னர், இலங்கையின் முன்னணி தமிழ் கட்சியை சேர்ந்த தலைவர்கள் இருவரிடம், எமது தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வேண்டி மனு ஒன்றை தயாரித்து, ஜனாதிபதியிடம் முன்வைக்கும் யோசனையை முன் வைத்தேன். ஆனால், எனது இந்த கோரிக்கைக்கு சாதகமான பதில் கிடைக்கவில்லை. நான் பாராளுமன்ற உறுப்பினர்கள் கெளரவ எம். ஏ. சுமந்திரன், கெளரவ செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரையே தொடர்பு கொண்டேன். கெளரவ சுமந்திரன், தமிழ் கைதிகள் பற்றிய ஒரு மனுவுக்கு உரிய தருமணம் இதுவல்ல என்று கூறினார். கெளரவ அடைக்கலநாதன், இது தொடர்பில் பரிசீலித்து பதில் கூறுவதாக கூறினார். எனது இந்த இரண்டு பாராளுமன்ற தோழர்களின் கருத்துரிமையை நான் மதிக்கின்றேன். துமிந்த சில்வாவின் மனுவில், நான் கையெழுத்திட்டதின் பின்னுள்ள காரணத்தை புரிந்துக்கொள்ளாமல் ஒரு சிறு பிரிவினர் செயற்படுகின்றனர். எனது இருபத்தைந்து வருட அரசியல் வரலாற்றில், ஒருபோதும் கட்சி தாவாமல், அரசியல் அணி மாறாமல், பணத்துக்கு விலை போகாமல், கொள்கைவழி விலகாமல், எனக்கு விடுக்கப்பட்ட உயிர் அச்சுறுத்தல்களை கண்டு ஓடி ஒளியாமல், மனித உரிமைகளுக்காக அர்ப்பணிப்புடன் நான் பணியாற்றியுள்ளதாக மனப்பூர்வமாக நம்புகிறேன். ஆனால், எனது இந்த நேர்மையான வரலாற்றை நினைவுக்கூர்ந்து பார்க்க இவர்களுக்கு முடியாமல் போயுள்ளது. அதேபோல், பல தசாப்தங்களாக சிறைவாசம் அனுபவிக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக நான் எடுக்கும் முயற்சியை, அந்த தமிழ் கைதிகளை, கொலைக்காரர்களுக்கு இணையாக பார்க்கிறேன் என இன்னொரு தமிழ் தரப்பு என் மீது குற்றம் சாட்டுகின்றது. இவர்களுக்கு நான் ஒன்றை கூற விரும்புகிறேன். இக்கைதிகளை, தமிழ் அரசியல் கைதிகள் என நாம் அடையாளப்படுத்தினாலும், இந்நாட்டின் தெற்கில் வாழும் பெரும்பான்மை மக்கள், அவர்களை இன்னமும் பயங்கரவாதிகளாகவே கணிக்கின்றனர். ஒருவரின் போராளி, அடுத்தவரின் குற்றவாளியாக தெரியும் உலக நடப்பை மறந்து, செயற்பட முடியாமையை இவர்கள் புரிந்துக்கொள்ள வேண்டும். தமிழ், முஸ்லிம், மக்கள் எதிர்கொள்ளும் இதுபோன்ற துன்பங்களுக்கு தீர்வுகளை தேட நாம் தெற்கின் சிங்கள மக்களுக்கு அவை பற்றிய புரிந்துணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பது எப்போதும் எனது உறுதியான வழி நிலைப்பாடாகும். துமிந்த சில்வாவின் விடுதலை மனுவில் நான் கையெழுத்திட்டதினால், மக்கள் மத்தியிலுள்ள ஒரு பிரிவினரின் மத்தியில் குழப்ப நிலைமை ஏற்படுவதை பயன்படுத்தி, எனது அரசியல் எதிரிகள், எனக்கு எதிராக பொய் பிரசாரங்களை முன்னெடுத்து, என் மீதும், என் நேர்மையின் மீதும் களங்கம் கற்பிக்க திட்டமிட்டு முயல்வது எனக்கு தெரிகின்றது. இதன்மூலம், எனது ஜனநாயக போராட்ட அரசியல் வரலாற்றை அழிக்க சிறுபிள்ளைத்தன முயற்சிகளில் இவர்கள் ஈடுபட்டுள்ளனர்.மேற்கண்ட காரணங்களை மனதில் கொண்டு, துமிந்த சில்வாவின் விடுதலை மனுவில் நான் இட்ட கையெழுத்தை அகற்றிகொண்டு வாபஸ் பெறுகின்றேன். அதேபோல், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை வேண்டி அரசாங்கத்தினதும், தெற்கின் சிங்கள மக்களின் கவனத்துக்கு கொண்டு செல்ல நான் மேற்கொள்ளும் முயற்சி, தவறாக புரிந்துக்கொள்ளப்படுவது தொடர்பில், நான் மிகவும் மனம் நொந்து போயுள்ளேன் என்பதையும் தெரிவிக்கின்றேன். எனினும், நீண்டகாலமாக தமது மனைவி, பிள்ளைகள், பெற்றோரை பிரிந்து, பெரும் துன்புற்று, சிறைசாலைகளில் வாழும் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க நான் மேற்கொள்ளும் முயற்சிகளை தொடர்ந்தும் நான் முன்னெடுப்பேன். அதேபோல், ஒரே நாட்டுக்குள் இலங்கையர் என்ற முறையில், நாம் அனைவரும் வாழ்வதற்கு குந்தகமாக இருக்கும் தடைகளை அகற்றும் எனது பாதையிலிருந்து நான் ஒருபோதும் விலக மாட்டேன்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles