நாட்டில் பதிவுசெய்யப்படாமல் 2 இலட்சத்துக்கு மேற்பட்ட பாரம்பரிய சின்னங்கள்

0
96

நாட்டில் 2 இலட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாரம்பரிய சின்னங்கள் இருந்தாலும் 17 ஆயிரம் பாரம்பரிய சின்னங்கள் மட்டுமே பதிவுசெய்யப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர தெரிவித்தார்.

தேசிய மரபுரிமைகளைப் பாதுகாப்பதற்கான பாராளுமன்ற குழு, பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர தலைமையில் கூடியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கையில் தற்போது எட்டு இடங்கள் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னங்களின் பட்டியலில் உலக மரபுரிமையாக உள்ளடக்கப்பட்டுள்ளன. ஆனால் அவை எதுவும் தேசிய பாரம்பரிய சின்னங்களாக அறிவிக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இலங்கையில் தேசிய பாரம்பரியத்தை பாதுகாப்பதற்காக தயாரிக்கப்பட்ட அறிக்கைகள் ஒடுக்கப்பட்டுள்ளதாக பேராசிரியர் வணக்கத்திற்குரிய இந்துரகரே தம்மரத்ன தேரர் குறித்த கலந்துரையாடலின்போது தெரிவித்தார்.

தேசிய பாரம்பரியத்தைப் பாதுகாக்க தேசிய மேலாண்மைச் சட்டம் தயாரிக்கப்பட வேண்டும் என்று தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் தலைவர்களும் இதன்போது கோரிக்கை விடுத்தனர்.

இந்த கலந்துரையாடலில் சிரேஷ்ட பேராசிரியர் வணக்கத்துக்குரிய இந்துரகரே தம்மரதன தேரர், பேராசிரியர் வணக்கத்துக்குரிய மெதகொட அபயதிஸ்ஸ தேரர், தொல்பொருள் துறையின் தன்னார்வ தொண்டு நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் மத்துகம செனவிருவான், கலாநிதி வசந்த பண்டார, முன்னாள் தொல்பொருள் ஆணையாளர் பேராசிரியர் செனரத் பண்டார திஸாநாயக்க, கலாநிதி காமினி ஜயவீர, மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரிய, சுனில் சந்திரகுமார, எஸ்.கே.சேனாநாயக்க மற்றும் பலர் கலந்துகொண்டனர்.