கொவிட்-19 தொற்று நிலைமைக்கு மத்தியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட நாட்டு மக்களுக்கு நலம் வேண்டி ஏழு நாட்கள் இடம்பெறும் ரதன சூத்ர பாராயணம் செய்யும் பிரித் உபதேசம் நாராஹேன்பிட அபயராம புராண விகாரையை மையமாகக் கொண்டு நேற்று முன்தினம் ஆரம்பிக்கப்பட்டது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் வழிபாடுகளில் ஈடுபட்டதை தொடர்ந்து பிரித் உபதேசத்தில் கலந்து கொண்டார்.
கொவிட்-19 தொற்று இல்லாதொழிக்கப்பட வேண்டும் என்று பிரார்த்தித்து நேற்று முன்தினம் முதல் தொடர்ந்து ஏழு தினங்கள் நாட்டிலுள்ள 200இற்கும் அதிகமான விகாரைகளில் ரதன சூத்ர உபதேசம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நாராஹேன்பிட அபயராமாதிபதி, மேல் மாகாண சங்கநாயக்கர் வணக்கத்திற்குரிய முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்தார்.
இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தினால் ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்வை, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு மற்றும் பௌத்த விவகார திணைக்களம் இணைந்து ஏற்பாடு செய்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் மற்றும் மக்களின் வாழ்க்கையை பாதித்துள்ள பிற நெருக்கடிகளையும் இல்லாதொழிப்பதற்கு ஆசி வேண்டி இந்த பிரித் உபதேசம் இடம்பெறுகின்றது.
வணக்கத்திற்குரிய முருத்தெட்டுவே ஆனந்த தேரரின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட ரதன சூத்ரய பாராயணம் செய்யும் பிரித் உபதேசத்தில் பேராசிரியர் வணக்கத்திற்குரிய மல்வானே சந்திரரதன தேரர், வணக்கத்திற்குரிய அதபத்து கந்தே ஆனந்த தேரர், வணக்கத்திற்குரிய வெலம்பிடியாவே ஞானரதன வித்யாலங்கார தேரர், வணக்கத்திற்குரிய மாபலகம புத்தசிறி தேரர் மற்றும் வணக்கத்திற்குரிய கிரிஇப்பன்ஆரே விஜித தேரர் உள்ளிட்ட மஹாசங்கத்தினர் இணைந்து கொண்டிருந்தனர்.
குறித்த சந்தர்ப்பத்தில் நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் மற்றும் பக்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
பிரதமர் ஊடக பிரிவு