கொரோனா வைரசு தொற்று பரவலை தடுப்பதற்காக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு விதிமுறைகளை முறையாகக் கடைப்பிடிக்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாட்டிலுள்ள 18 பொலிஸ் பிரிவுகளில் எதிர்வரும் 9ம் திகதி திங்கட்கிழமை வரை தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டம் அமுலாவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
இவற்றில் மேல் மாகாணத்தைச் சேர்ந்த 112 பொலிஸ் பிரிவுகளும், குளியாப்பிட்டியில் 5 பொலிஸ் பிரிவுகளும், எஹலியகொட பொலிஸ் பிரிவும் உள்ளடங்குகின்றன. இதற்கு அப்பால் குருநாகல் மாநகர சபை எல்லையிலும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டம் அமுலாகிறது. கொவிட்-19 தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதன் இதன் நோக்கம் என்பதால் ஊரடங்கு விதிமுறைகளை முறையாகக் கடைப்பிடிக்குமாறு ஊடகப் பேச்சாளர் மக்களைக் கேட்டுக் கொண்டார்.
மேல் மாகாணத்தில் அத்தியாவசியப் பொருட்களை வீடுகளுக்கே விநியோகிக்கும் வேலைத்திட்டத்தை அமுலாக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சிலர் நிபந்தனைகளின் அடிப்படையில் பொருட்களை விநியோகிக்கலாம். அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களில் தகவல்களைப் பெற முடியும். மொத்தமாக 89 அரச நிறுவனங்களைச் சேர்ந்த பணியாளர்கள் தமது அலுவலக அடையாள அட்டைகளை ஊரடங்குச்சட்ட அனுமதிப்பத்திரமாக பயன்படுத்தலாம்.
ஊரடங்கு அமுலாகும் காலப்பகுதியில் முடிந்தவரை நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மக்களிடம் கேட்டுக் கொண்டார். ஊரடங்கு அமுலாகாத பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் வெளியே செல்லும் பட்சத்தில் சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளை அனுசரிப்பது கட்டாயமானதாகும். முகக் கவசம் அணியாமல் செல்வதும் ஆள் இடைவெளி பேணாமல் இருப்பதும் தண்டனைக்குரிய குற்றம் என அவர் சுட்டிக்காட்டினார்.