பி.சி.ஆர். சான்றிதழ் இல்லாத எவரும் மன்னாருக்குள் நுழைய முடியாது – பதில் அரச அதிபர்

0
290

பி.சி.ஆர்.பரிசோதனை சான்றிதழ் இல்லாத எவரும் மன்னார் மாவட்டத்திலிருந்து ஊரடங்குச் சட்டம் அமுலிலுள்ள பகுதிகளுக்குச் சென்று பொருள்களைக் கொள்வனவு செய்யவோ, அங்கிருந்து மன்னாருக்கு வரவோ முடியாது என மன்னார் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன் தெரிவித்தார்.

மன்னார் மாவட்டச் செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற அவசர கலந்துரையாடலின்போது முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பில் ஊடகங்களுக்கு அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:

மன்னார் மாவட்டச் செயலகத்தில் இன்று மாலை அவசர கலந்துரையாடல் இடம்பெற்றது. இந்தக் கலந்துரையாடலில் மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் உள்ளடங்களாக அழைக்கப்பட்ட திணைக்களத் தலைவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

இந்தக் கலந்துரையாடலின்போது நாட்டில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள இடங்களுக்குச் சென்று வருகின்ற வாகனப் போக்குவரத்து தொடர்பில் கூடிய கவனம் செலுத்தப்பட்டது. இதேவேளை, பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட சான்றிதழ்; வைத்துள்ள சாரதிகள் மற்றும் உதவியாளர்களுக்கு மாத்திரமே இவ்வாறு சென்றுவர முடியும் எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் இன்று முதல் கொழும்பு மற்றும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுலிலுள்ள பகுதிகளுக்குச் சென்று பொருள்களைக் கொள்வனவு செய்யவுள்ளவர்கள் அண்மையிலுள்ள பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் அல்லது மாவட்ட மருத்துவ அதிகாரியுடன் தொடர்பு கொண்டு பி.சி.ஆர். பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.

எதிர்வரும் 13ஆம் திகதியிலிருந்து இந்த நடைமுறை அமுல்படுத்தப்படவுள்ளது.
பி.சி.ஆர்.பரிசோதனை செய்யப்பட்ட சான்றிதழ் இல்லாத எவரும் மன்னார் மாவட்டத்திலிருந்து ஊரடங்குச் சட்டம் அமுலிலுள்ள பகுதிக்குச் சென்று பொருள்களைக் கொள்வனவு செய்யவோ, அங்கிருந்து மன்னாருக்கு வரவோ முடியாது.

மன்னாருக்கு யாராவது வருவதாகவிருந்தால் தங்களுடைய இடங்களிலிருந்து பி.சி.ஆர். பரிசோதனை அறிக்கையுடன் வரவேண்டும் என அவர் தெரிவித்தார்.