கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டமைக்கான அறிகுறிகள் எவையும் 10 நாள்களுக்குள் தென்படாதவர்களை, பி.சி.ஆர் பரிசோதனையின்றி மீண்டும் வீடுகளுக்கு அனுப்பிவைப்பதற்கு அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டிருக்கும் தீர்மானம் மிகமோசமான அனர்த்தமொன்றுக்கான ஆரம்பமாகவே அமையும் என்று ஐக்கிய தேசியக் கட்சி எச்சரித்திருக்கிறது.
இதுகுறித்து ஐக்கிய தேசியக் கட்சியினால் சனிக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
பத்து நாள்களுக்குப் பின்னர் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டமைக்கான அறிகுறிகள் எவையும் தென்படாதவர்களை, பி.சி.ஆர் பரிசோதனையின்றி மீண்டும் வீடுகளுக்கு அனுப்பிவைப்பதற்கு அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டிருக்கும் தீர்மானம் மிகமோசமான அனர்த்தம் ஒன்றுக்கான ஆரம்பமாகவே அமையும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவ்வாறான தீர்மானமொன்றை மேற்கொள்வதற்குக் காரணமாக அமைந்த ஏற்றுக்கொள்ளப்பட விஞ்ஞானபூர்வமான அறிக்கையை மக்களுக்குப் பகிரங்கப்படுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.
அதேபோன்று தனிமைப்படுத்தல் பொலிஸ் ஊரடங்கு நீக்கப்பட்டதும் மக்களின் சுகாதாரப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதும் அரசாங்கத்தின் பொறுப்பாகும். கொரோனா வைரஸ் பரவல் தொடர்பில் அதனைத் தடுப்பதற்குக் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தொடர்பிலும் ஜனாதிபதி, இராணுவத்தளபதி, தொற்றுநோய்த்தடுப்புப் பிரிவின் பணிப்பாளர், அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் உள்ளிட்டோரால் வெளியிடப்படும் கருத்துக்கள் பலவும் ஒன்றுக்கொன்று முரணானவையாகவே இருக்கின்றன.
விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீரவின் கருத்தின்படி, ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இருப்பினும் அவரிடத்தில் அறிகுறிகள் எவையும் தென்படாவிடின் அவர் பி.சி.ஆர் பரிசோதனையின்றி வீட்டுக்கு திரும்ப அனுமதியளிக்கப்படுகிறது.