புற்றுநோயை பூரணமாக குணப்படுத்துவதாக வெளியாகும் விளம்பரங்கள் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மஹரகம அபேக்ஷா புற்றுநோய் வைத்தியசாலையின் உளவியல் மருத்துவர் கே.வி.என் ரஞ்சன் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
புற்று நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது உறவினர்கள் பலர் மோசடிக்காரர்களிடம் சிக்குவதாக அவர் தெரிவித்துள்ளார்.
புற்றுநோயை பூரணமாக குணப்படுத்த முடியும் என சிலர் ஊடகங்களில் பணம் செலுத்தி விளம்பரம் செய்து மோசடி செய்வதாக அவர் எச்சரித்துள்ளார்.
மஹரகம அபேக்ஷா புற்றுநோய் வைத்தியசாலையில் சிறந்த மருத்துவ நிபுணர்கள் சேவை வழங்கி வருவதாகவும், தாதியர் உள்ளிட்ட ஏனைய மருத்துவ சேவைகளை வழங்குவோரும் சிறந்த முறையில் அர்ப்பணிப்புடன் சேவையை வழங்கி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக புற்று நோயினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் பெற்றோர் இவ்வாறான மோசடிகளில் சிக்கி விடுவதாக அவர் கூறியுள்ளார்.
அநேகமான புற்று நோய்கள் ஆரம்ப கட்டத்தில் கண்டறிந்து கொண்டால் பூரணமாக குணப்படுத்த முடியும் எனவும் விளக்கமளித்துள்ளார்.
சரியான முறையில் மருத்துவ சிகிச்சைகளை தொடர்ச்சியாக எடுத்துக் கொள்வதன் மூலம் புற்று நோய்களை குணப்படுத்த அல்லது கட்டுப்படுத்த முடியும் என டொக்டர் ரஞ்சன் தெரிவித்துள்ளார்.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் புற்று நோய் சிகிச்சை தொடர்பிலான மோசடிகள் இடம்பெற்று வருவதாக அவர் எச்சரிக்னை விடுத்துள்ளார்.