பேருவளை மீனவத் துறை முகத்தில் 20 மீனவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிச் செய்யப்பட்டுள்ளது.
திடிரென மேற்கொள்ளப்பட்ட பி.சீ.ஆர் பரிசோதனையில் இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பேலியகொட மத்திய மீன் விற்பனை நிலையத்தில் தொடர்ந்தும் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருவதை தொடர்ந்து நாடு முழுவதிலும் உள்ள மீன் விற்பனை நிலையங்கள் பல மூடப்பட்டுள்ளன.
இதற்கமைய பேருவளை மீனவத் துறை முகத்தில் சுமார் நூறு மீனவர்களுக்கு நேற்று பி.சீ.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.
இதில் 20 பேருக்கு கொவிட் 19 தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து களுத்துறை தேசிய சுகாதார நிறுவனத்தின் மாவட்ட பொது சுகாதார பரிசோதகர் ஆர்.ஜி. சிங்கபாஹூ, ´நேற்று மாலை அளுத்கம பஸ் நிலையத்தை மையப்படுத்தி 74 பரிசோதனைகள் நடைபெறுவதாக தகவல் கிடைத்தது. அவற்றில் அளுத்கமயில் மீன் பிடியில் ஈடுபடும் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதியானது. அதற்கமைய பேருவளை துறைமுகத்தில் சுமார் 100 மீனவர்களுக்கு பி.சீ.ஆர் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. அதிலிருந்து இவ்வாறு நூற்றுக்கு 20 வீதமான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்´
இதனை அடுத்து பேருவளை மீன்பிடி துறைமுகத்தை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மீனவர்களும் அவர்களின் குடும்பத்தவர்கள் 700 பேரும் இன்று பி.சீ.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.
இதேவேளை, பேருவளை பிரதேச சபையையும், அளுத்கம மீன் வர்த்தக கட்டட தொகுதியையும் மூடுவதற்கு சுகாதார பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.