பேலியகொட மீன் விற்பனை நிலையத்தில் கடந்த 4 நாட்களில் 471 பேர் கொவிட் 19 தொற்றுக்கு உள்ளான நிலையில் அது ஐந்து மடங்கு அதிகரிப்பு என கொழும்பு மாநகர சபையின் பிரதம சுகாதார அதிகாரி டொக்டர் ருவான் விஜயமுனி தெரிவித்துள்ளார்.
கொழும்பு நகரின் தற்போதைய கொவிட் 19 நிலைமை தொடர்பில் இன்று (24) காலை தெரண அருண நிகழ்ச்சியில் பங்கேற்று கருத்து தெரிவித்த போதே அவர் இதனை கூறியுள்ளார்.
கடந்த மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் தற்போதைய நிலைமையில் கொரோனா வைரஸ் பரவல் வேகம் அதிகரித்துள்ளதாக அவர் கூறினார்.
பேலியகொட மீன் விற்பனை நிலையத்தில் வைரஸ் இலகுவில் பரவுவதற்கான குளிரூட்டும் நிலைமை அதிகரித்து காணப்பட்டமையே பிரதான காரணம் எனவும் அவர் கூறினார்.
இதேவேளை இலங்கையில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொவிட் 19 தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 7153 ஆக உயர்வடைந்துள்ளது.
இறுதியாக நேற்று (23) 865 பேர் தொற்றுடன் இனம் காணப்பட்டதை தொடர்ந்தே இவ்வாறு தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
865 பேர் நேற்று அடையாளம் காணப்பட்ட நிலையில் அது ஒரு நாளில் பதிவான அதிகூடிய தொற்றாளர்கள் எண்ணிக்கையாகும்.