பொதுச் சுகாதார அவசர சட்டம் இயற்ற தனிநபர் சட்ட வரைவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சபையில் சமர்ப்பித்துள்ளார்.
இந்த சட்ட வரைவில் பொதுச் சுகாதார அவசரநிலை அறிவிக்கப்படுவதற்கும் பொதுச் சுகாதார அவசர சபை அமைப்பதற்குமான ஏற்பாடுகள் காணப்படுகின்றன.
பொதுச் சுகாதார அவசரகால நிலையின் இருப்பு அல்லது உடனடித் தன்மையைக் கருத்தில் கொண்டு, பொதுச் சுகாதார நலன்களுக்காக அதைச் செய்வது மிகவும் பயனுள்ளது. கொரோனா தொற்றுநோய் உலகம் முழுவதும் தொடர்ந்து பரவி வரும் நிலையில் நாட்டில் எதிர்காலத்தில் அதை எதிர்த்துப் போராடுவதற்கான நடவடிக்கைகளை சட்டபூர்வமாக வழங்குவது பயனுள்ளது என்று அதில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது.
இந்தச் சட்டத்தின் பிரிவு 2 இன் கீழ் ஒரு பொதுச் சுகாதார அவசரநிலை அறிவிக்கப்பட்டால், பொதுச் சுகாதார அவசர நிலைப் பேரவை என்று அழைக்கப்படும் ஓர் அமைப்பை உருவாக்க முன்மொழிவும் முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த அமைப்பில் ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், சுகாதார, சமூக நலன் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட பல அமைச்சுக்களைப் பொறுப்பானதாக் கொண்டிருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், பொதுச் சுகாதார அவசரகால சட்டத்தில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் எழுத்துபூர்வ ஆலோசனையின் பேரில் அமைச்சரால் அடிப்படை உரிமைகளை தற்காலிகமாக நிறுத்திவைப்பதற்கான ஏற்பாடுகளும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.