போலி இலக்கத் தகடு பொருத்தப்பட்ட ஜீப் வண்டியுடன் புத்தளம் மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாந்த அபேசேகர மற்றும் அவரது மகன் ஆகியோர் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிலாபம் பகுதியில் சட்டவிரோதமான முறையில் கொள்வனவு செய்யப்பட்ட ஜீப் வண்டியை நபர் ஒருவர் பயன்படுத்துவதாக கிடைத்த தகவலுக்கமைய குற்றப்புலனாய்வு பிரிவின் சட்டவிரோத சொத்துகள் விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை (18) போலி இலக்கத் தகடு பொருத்தப்பட்ட ஜீப் வண்டி ஒன்று அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து அன்றைய தினம் பிற்பகல் வாகனத்தின் உரிமையாளர் என அடையாளப்படுத்திக் கொண்டு புத்தளம் மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாந்த அபேசேகர மற்றும் அவரது மகன் ஆகியோர் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவுக்கு வருகை தந்து வாக்குமூலமளித்திருந்தனர்.
இந்நிலையில் சட்டவிரோதமான சொத்து சேர்ப்பு, போலி வாகன இலக்கத் தகடுடன் வாகனம் செலுத்தியமை உள்ளிட்ட குற்றத்தின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ளனர். சிலாபத்தைச் சேர்ந்த 63 வயதுடைய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் அவரது 31 வயதுடைய மகனும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேலும் இது தொடர்பில் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.