மக்களுக்காக வீதிக்கு இறங்கி போராடுவோம் – திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி

0
127

மக்கள் ஆணையின்றி இந்த அரசாங்கத்தை அதிகாரத்தில் இருப்பதற்கு அனுமதிக்கப் போவதில்லை என்று, ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

தற்போதைய இந்த அரசாங்கம், மக்கள் ஆணையின்றி அதிகாரத்தில் இருப்பதற்கு முயற்சித்தால், நாட்டு மக்களுக்காக வீதிக்கு இறங்கி போராட நேரிடும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் பதவி காலத்தை மேலும் இரண்டு வருடங்களுக்கு நீடிக்க வேண்டும் என்ற யோசனையை டயானா கமகே எம்.பி முன்வைத்துள்ள நிலையில், இது தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே, திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

யாரினுடைய தேவைக்காக டயானா கமகே எம்.பி இவ்வாறு கூறுகின்றார் என்று தெரியவில்லை. எனினும் ஜனாதிபதி இது தொடர்பில் சுட்டிக்காட்டியுள்ளார். இரண்டு ஆண்டுகள் ஜனாதிபதியால் பணியாற்ற முடியாமல் போனதாம். புதிதாக பணியாற்றுவதற்கு ஆரம்பித்துள்ளாராம்.

1970ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவுக்கு ஐந்து வருடங்களே, மக்கள் ஆட்சி பலத்தை வழங்கினர்.

எனினும் அவர், 1977ஆம் ஆண்டு வரை மக்கள் ஆணையின்றி ஆட்சி அதிகாரத்தில் இருக்க முயற்சித்ததால் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி வரலாற்றில் பாரிய வீழ்ச்சியை சந்திக்க நேர்ந்தது. இந்த வரலாறு தெரிந்தவர்கள் ஜனாதிபதியின் பதவி காலத்தை நீடிக்குமாறு கூற மாட்டார்கள்.

எனினும் மக்கள் ஆணையின்றி நாட்டை ஆட்சி செய்வதற்கு யாருக்கும் அதிகாரமில்லை. அதற்கெதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் தயாராகவுள்ளன. மக்கள் ஆட்சியை கோரவில்லை. நிவாரணத்தையே கோரி நிற்கின்றனர். எனவே மக்களுக்காக வீதிக்கு இறங்கி போராட தயாராகவுள்ளோம்.

மக்கள் ஆணை வழங்கப்பட்டால், குறிப்பிட்ட நேரத்துக்குள் அவர்கள் தங்கள் பொறுப்பை நிறைவேற்ற வேண்டும். அந்தப் பொறுப்பை நிறைவேற்றாமல், சாக்குப்போக்கு சொல்வதில் அர்த்தமில்லை என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.