![](https://eelanadu.lk/wp-content/uploads/2023/01/6-1024x768.jpg)
மன்னாரில் இராணுவத்தினரால் நிறுத்தப்பட்ட சிறு கடற்றொழிலை செய்ய, பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனின் தலையிட்டால் மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மன்னார் – யாழ் பிரதான வீதி, தள்ளாடி 14 கண் பாலத்தடியில் வாழ்வாதாரத்துக்காக நீண்ட காலங்களாக சிறு கடல் தொழில் செய்யும் மீனவர்களை இராணுவம் அப்பகுதியில் தொழில் செய்ய அனுமதிக்காததன் காரணமாக, அப்பகுதி மீனவர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வந்தனர்.
பாதிக்கப்பட்ட மீனவர்கள் தமது பிரச்சினை தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலாதனின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். இந்நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் குறித்த பகுதிக்கு நேற்று மாலை நேரடியாக சென்று மீனவர்களின் நிலைமை தொடர்பாக ஆராய்ந்ததுடன் வன்னி இராணுவ தலைமையகத்துடன் தொடர்பு கொண்டு இப்பிரச்சினை தொடர்பாக தெரியப்படுத்தினார். உடனடியாக தள்ளாடி இராணுவ பொறுப்பு அதிகாரி சம்பவ இடத்திற்கு வருகை தந்து பாராளுமன்ற உறுப்பினருடன் கலந்துரையாடியதுடன், பாராளுமன்ற உறுப்பினரின் வேண்டுகோளுக்கு அமைவாக, குறித்த மீனவர்கள் தொடர்ந்தும் அப்பகுதியில் சிறு கடல் தொழில் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.