மரக்கிளை விழுந்ததில் ஆசிரியர் உயிரிழப்பு: மரத்தை வெட்டியவர்களுக்கு விளக்கமறியல்

0
156

ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் மரமொன்றின் கிளைகளை வெட்டிக்கொண்டிருந்த போது அதன் கிளை உடைந்து வீதியில் சென்ற ஆசிரியர் ஒருவரின் உயிரை பறித்த சம்பவத்தில் கைதானவர்களுக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் இரண்டு பெண்கள் உட்பட ஐவரை லிந்துலை பொலிஸார் இன்று (22) கைது செய்திருந்தனர்.

தலவாக்கலை லோகி மல்லியப்பு பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள், ஆலமரத்தை வெட்டிய நானுஓயா பகுதியைச் சேர்ந்த இருவர் மற்றும் மரம் வெட்டுவதற்கு ஒப்பந்தம் பெற்ற நுவரெலியா பகுதியைச் சேர்ந்த ஒருவரையும் பொலிஸார் கைதுசெய்திருந்தனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்று (22) நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது, சந்தேக நபர்களை எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.