ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் உத்தியோகபூர்வ கடமைக்காக அமெரிக்கா சென்றிருந்த பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே அமெரிக்காவிற்கு விஜயம் செய்ததன் காரணம் என்ன என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ கேள்வி எழுப்பியுள்ளார்.“மகிந்தானந்த அளுத்கமகே, மத்திய வங்கி பிணைமுறி மோசடி வழக்கில் ரணில் சிறையில் அடைக்கப்படும் வரை தூங்க முடியாது என கூறியவர். ஒருவேளை அவருக்கு தூக்கம் வராததால் அமெரிக்காவிற்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கலாம்” என ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.“எதிர்க்கட்சி அரசாங்கத்திற்கு எதிராக இருப்பதாகத் தோன்றினாலும், உண்மையான ஒப்பந்தம் இப்போது தெரிகிறது. மகிந்தானந்த மட்டுமல்ல, ரோஹிதவும் கூட ரணிலுடன் அமெரிக்காவில் சூட் போட்டுக் கொண்டு அமெரிக்காவில் இருந்தார்” என பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவைக் குறிப்பிட்டு ஜயதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார்.
தற்போது ஜனாதிபதியுடன் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களில் ஈடுபட்டு வருவதாகக் காணப்படுகின்ற போதிலும், ஜனாதிபதியிடம் இருந்து வேறுபட்ட கருத்துக்களைக் கொண்டிருப்பதாக இந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் பகிரங்கமாக கூறுவதாக ஜயதிஸ்ஸ குற்றம் சுமத்தியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் கட்சிகள் உட்பட பல எதிர்க்கட்சிகள் விரைவில் ஜனாதிபதியுடன் இணைந்துகொள்ளும் என அவர் தெரிவித்துள்ளார்.“இது எங்களுக்கு விடயங்களை எளிதாக்கும், நாங்கள் மக்களுக்கு மட்டுமே பக்கபலமாக இருப்போம்,” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.