வெளிநாடுகளில் இருந்து இலங்கை திரும்பியவர்களை பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தும் நடவடிக்கைகளில் பல முறைகேடுகள் காணப்படுவதாக முன்னாள் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்கவின் மகள் வைத்தியர் துசார விக்கிரமநாயக்க குற்றம்சாட்டியுள்ளார்.
இரண்டு வாரங்களுக்கு முன்னர் நாடு திரும்பிய நிலையில் ஹோட்டலொன்றில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள அவர் வீடியோ மூலமும் முகநூல் மூலமும் தனது குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளார்.முன்னாள் பிரதமரின் மகள் தான் தனிமைப்படுத்தப்பட்டுள்ள ஹோட்டலில் தனக்கு இழைக்கபபட்ட அநீதிகளை பதிவுசெய்துள்ளார்.
வெளிநாட்டிலிருந்து வந்த நான் எனது தனிமைப்படுத்தலை நிறைவுசெய்த பின்னர் ஹோட்டலில் இருந்து வெளியேற முயன்றவேளை என்னை ஹோட்டலில் இருந்து வெளியேறுவதற்கு தனிமைப்படுத்தலி;ற்கு பொறுப்பானவர்கள் அனுமதிக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
நான் ஹோட்டலில் இருந்து வெளியேறினால் என்னை கைதுசெய்வேன் என இராணுவ அதிகாரியொருவர் தெரிவித்தார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஹோட்டலில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் சோதனைகள் குறித்து எனக்கு இன்னமும் அறிவிப்புகள் வரவில்லை,என்னிடம் எடுக்கப்பட்ட மாதிரிகளை காணவில்லை என அறிவித்துள்ளனர் என முன்னாள் பிரதமரின் மகள் தெரிவித்துள்ளார்.
தனிப்பட்ட முறையில் பிசிஆர் சோதனையை மேற்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர் இல்லாவிட்டால் நான் ஹோட்டலில் இருந்து வெளியேற முடியாது என குறிப்பிட்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.என்னால் தனிப்பட்ட முறையில் பிசிஆர் சோதனைகளை மேற்கொள்ள முடியாவிட்டால் அரசாங்க பிசிஆர் சோதனைகளை மேற்கொள்ளுமாறு தனக்கு அரசாங்கம் தெரிவித்தது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய விதிமுறைகளின் படி நெருங்கிய தொடர்பிலிருந்தவர்கள் கூட வீடுகளில் தனிமைப்படுத்தப்படுகின்றனர் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒரு வாரகாலத்திற்கு முன்னர் எடுக்கப்பட்ட மாதிரிகள் மூலம் முடிவுகள் தெரியவில்லை என தெரிவிக்கின்றனர், இது வற்புறுத்தும் கட்டாய அடக்குமுறை இல்லையா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
கொவிட் நிதியத்திற்கு என்ன நடந்தது? அரசாங்கத்தின் அக்கறையற்ற தன்மைக்காக என்னை கைதுசெய்ய முடியுமா? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
நீர்கொழும்பில் உள்ள ஹோட்டலொன்றில் தன்னை தனிமைப்படுத்தியுள்ளனர் ஹோட்டலிற்கு மாத்திரம் 176.000 ரூபாயை செலுத்தியுள்ளேன் இதன் காரணமாக பிசிஆர் சோதனைகளுக்காக பணத்தை செலுத்த முடியாத நிலையில் உள்ளேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.