கொரோனா வைரசினால் உயிரிழந்த முஸ்லீம்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு அனுமதிக்கவேண்டும் என்ற கோரிக்கைகள் குறித்து அரசாங்கம் ஆராய்ந்து வருகின்றது என சுகாதார அமைச்சரும் நீதியமைச்சரும் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
தொற்றுநோயியல் மற்றும் மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழுவொன்று கொவிட் 19 காரணமாக உயிரிழந்தவர்களின் உடல்களை அகற்றுவதற்கான பொருத்தமான வழிமுறைகள் குறித்து ஆராயும் என தெரிவித்துள்ள சுகாதார அமைச்சர் உடல்களை அடக்கம் செய்வதற்கு அனுமதிக்கலாமா என்பது குறித்தும் குறிப்பிட்ட குழுவினர் ஆராய்வார்கள் என தெரிவித்துள்ளனர்.
கொரோனா வைரசினால் உயிரிழந்த முஸ்லீம்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு அனுமதிக்கவேண்டும் என பல தரப்பினர் விடுத்துள்ள வேண்டுகோள்களை அரசாங்கம் ஆராய்ந்துவருகின்றது என நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரசினால் உயிரிழந்த முஸ்லீம் மக்களின் உடல்களை தகனம் செய்யவேண்டாம் என இந்த வருட ஆரம்பத்தில் வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டன என அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஆராய்வதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.
வைரசின் இயல்பு குறித்து தெரியாததாலும் கொவிட் 19 குறித்த நிச்சயமற்ற தன்மை காரணமாகவும் கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதில்லை என்ற முடிவு எடுக்கப்பட்டது எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தற்போது ஆறுமாத காலங்கள் முடிவடைந்துள்ள நிலையில் இது குறித்து மீள ஆராயப்படுவதாக நீதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரசினால் உயிரிழந்த அனைவரினதும் உடல்களை தகனம் செய்வது என்பது குறித்த முடிவை அரசாங்கம் தற்போது மறுபரிசீலனைக்கு உட்படுத்தியுள்ளது என நீதியமைச்சர் தெரிவித்துள்ளார்.