யாழில் எலிக்காய்ச்சலால் 58 பேர் பாதிப்பு! 7 பேர் உயிரிழப்பு!!

0
46

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இதுவரை எலிக்காய்ச்சல் நோயால் 58 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம், பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் இன்று நடைபெற்ற ஊடகச் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 24 பெரும், கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 24 பெரும், மருதங்கேணி பிரிவில் 6 பெரும், சாவகச்சேரி பிரிவில் 4 பேருமாக இதுவரை 58 பேர் எலிக்காய்ச்சல் நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் மொத்தமாக 7 இறப்புகள் பதிவாகின. அதில் 6 இறப்புகள் யாழ்ப்பாணம் மாவட்டத்திலும் ஒன்று முல்லைத்தீவு மாவட்டத்திலும் பதிவாகின.

எலிக்காய்ச்சல் நோய் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால் இதற்கான தடுப்பு நடவடிக்கைகளை நாங்கள் முன்னெடுத்து வருகின்றோம்.

ஒருநாள் காய்ச்சலாக இருந்தாலும் உடனடியாக அரச வைத்தியசாலைக்கு செல்லுமாறு கேட்டுக்கொள்கின்றோம். ஏனெனில், கடந்த நாள்களில் ஏற்பட்ட இறப்புகள் மிகவும் தாமதமாக வைத்தியசாலைக்கு வந்த காரணத்தால் ஏற்பட்டன.

உடனடியாக வைத்தியசாலைக்கு வந்த நோயாளர்கள் பூரண குணமடைவதை அவதானிக்க முடிகின்றது. எனவே, மீண்டும் வலியுறுத்துகின்றோம். ஒருநாள் காய்ச்சல் வந்தாலும் அரசாங்க வைத்தியசாலைக்கு உடனடியாக செல்லுங்கள்.

இன்று முதல் நாங்கள் ஆபத்தை எதிர்நோக்கும் நோயாளர்களுக்கு ‘ரொக்ஸி சைக்கிளின்’ என்கின்ற தடுப்பு மாத்திரையை வழங்குகின்ற ஏற்பாடு செய்துள்ளோம். விவசாய திணைக்களத்துடன் இணைந்து, விவசாய அமைப்புகளின் உதவியுடன் விவசாயிகளுக்கு இந்தத் தடுப்பு மருந்துகளை வழங்குகின்றோம்.

அத்துடன், பொதுச் சுகாதார பரிசோதகர்கள் களவிஜயம் மேற்கொண்டு காய்ச்சலுடன் இருப்பவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு இந்த தடுப்பு மருந்து வழங்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

தற்பொழுது சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவிலிருந்து நேற்று விசேட வைத்திய அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்று வருகை தந்திருந்தது. அவர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கும், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கும் சென்று ஆய்வுகளை மேற்கொண்டிருந்தனர்.

தற்பொழுது அவர்கள் பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையிலும், அதனைத்தொடர்ந்து கரவெட்டி மற்றும் சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைகளிலும் ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளனர்.

இதற்கு மேலதிகமாக மற்றுமொரு விசேட வைத்திய நிபுணர்கள் குழு கொழும்பு தொற்றுநோய் தடுப்பு பிரிவிலிருந்து வருகை தருகின்றனர். அவர்களும் இணைந்து கள ஆய்வுகளை மேற்கொள்வார்கள். எவ்வாறு இந்த நோயை கட்டுப்படுத்துவது என்பது தொடர்பில் ஆலோசனைகளை வழங்கவுள்ளனர்- என்றார்.