முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 2023 ஆம் ஆண்டு தனது மனைவியுடன் ஐக்கிய இராச்சியத்திற்குத் தனிப்பட்ட விஜயம் மேற்கொண்டுள்ளார். இந்த விஜயத்தின் போது 40 ஆயிரம் ஸ்ரேலிங் பவுன்ட் இலங்கை பணத்தில் 16 மில்லியனுக்கும் அதிகமாக அரச நிதியைப் பயன்படுத்தியுள்ளதாகச் சபை முதல்வரும்இ அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற பாதீடு தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.பொது நிதியைத் தனிப்பட்ட விஜயத்திற்காகப் பயன்படுத்துவது குற்றவியல் குற்றம் என அமைச்சர் இதன் போது குறிப்பிட்டார். சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு வெளிவிவகார அமைச்சுக்கு அமைச்சர் வலியுறுத்தினார்.
ஐக்கிய இராச்சியத்துக்கு ரணில் விக்கிரமசிங்க மற்றும் அவரது மனைவியுடன் பத்து பேர் கொண்ட குழு சென்றதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க சுட்டிக்காட்டினார். இந்தப் பயணம் ஆரம்பத்தில் ஒரு தனிப்பட்ட விஜயம் எனத் தெரிவிக்கப்பட்ட போதிலும், பின்னர் நிதியைப் பெறுவதற்காக ஜனாதிபதி செயலகம் அனுப்பிய கடிதத்தில் உத்தியோகப்பூர்வ விஜயம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க குற்றம் சுமத்தினார்.