வங்காள விரிகுடாவில் உருவான தாழமுக்கம் இலங்கைக்குள் நுழைந்தது

0
306

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் உருவான தாழமுக்கம் கிழக்கு கடற்கரை வழியாக இலங்கைக்குள் நுழைந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. தாழமுக்க நிலை நாட்டை ஊடறுத்து செல்லவுள்ள நிலையில், நாட்டின் பல பாகங்களில் கடும் மழை பெய்யக்கூடும் கடலுக்குச் செல்லும் போது கடற்படை மற்றும் மீனவ சமூகங்கள் அவதானமாக இருக்குமாறு கோரப்பட்டுள்ளனர். கடந்த சில மணித்தியாலங்களாக பெய்துவரும் பலத்த மழை காரணமாக கண்டி புகையிரத நிலையம் முற்றாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதனால் புகையிரத சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. நேற்று தென்மேற்கு வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் காணப்பட்ட தாழமுக்கமானது, கடந்த 06 மணித்தியாலத்தில் மணிக்கு 8 கிலோமீற்றர் வேகத்தில் தென்மேற்கு திசையில் நகர்ந்து, இன்று காலை 05.30 மணிக்கு திருகோணமலையிலிருந்து வட கிழக்காக 110 கிலோமீற்றர் தூரத்தில் வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் காணப்பட்டது. இன்று தென்மேற்கு கிழக்கு கடற்கரை ஊடாக இலங்கையினுள் நுழைந்துள்ளது. இந்த தாழமுக்கம் இலங்கையை ஊடறுத்து நாளை காலை கன்னியாகுமாரி நோக்கிச் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.