மத சகவாழ்வை முன்னெடுக்கும் வேலைத்திட்டத்தின் ஓர் அங்கமாக அம்பாறை மாவட்டத்தில் மூவின இளைஞர் யுவதிகளை இணைத்து அமைக்கப்பட்ட சர்வ மத இளைஞர் அமைப்புக்கான ‘சட்டத்தின் ஆட்சி’ தொடர்பிலான ஒருநாள் செயலமர்வு நேற்று அக்கரைப்பற்றில் இடம்பெற்றது.தேசிய சமாதான பேரவையின் அனுசரணையின் கீழ் அட்டாளைச்சேனை பிரதேச சர்வமத குழு மற்றும் றுகுனு லங்கா அமைப்பு ஆகியன இணைந்து நடாத்திய இச் செயலமர்வில் பல்கலைக் கழக மற்றும் உயர் கல்வி நிறுவனங்களின் மாணவர்கள், இளைஞர் அமைப்புக்களின் பிரதி நிதிகள் மற்றும் சர்வ மத குழுpவின் உறுப்பினர்கள் என 50க்கும் மேற்பட்டவர்கள் இதில் பங்கேற்றிருந்தனர்.
றுகுனு லங்கா அமைப்பின் தலைவர் எம்.எஸ்.எம். ஜகுபர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், தேசிய சமாதான பேரவையின் நிகழ்ச்சித் திட்ட முகாமையாளர் எம்.யூ.உவைஸ் மதானி மற்றும் பல்கலைக கழக விரிவுரையாளரும் சிரேஸ்ட சட்டத்தரணியுமான எம்.ஏ.எம். ஹக்கீம் ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொண்டனர்.
இதன் போது, மனித உரிமைகள், கருத்தேற்பும் வரலாற்றுப் பரிமாணமும், மனிதனும் சமூகமும், மனித சுதந்திரம் போன்றன பற்றி விளக்கமளிக்கப்பட்டன. மேலும், மனித உரிமைகள் தொடர்பான முக்கிய சர்வதேச ஆவணங்கள், சட்ட அமுலாக்கம் தொடர்பாகவும் இதன் போது எடுத்துரைக்கப்பட்டது.