நுவரெலியா – அக்கரப்பத்தனை டொரிங்டன் தோட்டத்தின் பிரிவான மோர்சன் குடியிருப்பு பின்புறத்தில் உள்ள மலையிலிருந்து பாரிய கற்பாறைகள் சரிந்து விழுந்ததால் அப்பகுதியில் வாழும் 20 குடும்பங்களைச் சார்ந்த 70க்கும் மேற்பட்டவர்கள் தொடர்ந்து அச்சத்தில் உள்ளனர்.
குறித்த தோட்டம் அமைந்திருக்கும் பகுதியில் பாரிய அளவிலான கற்பாறைகள் காணப்படுவதால் மழைக்காலங்களில் சரிந்து விழகூடிய நிலைமையே காணக்கூடியதாக இருக்கின்றன.
கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு அதே பகுதியில் பாரிய கற்பாறைகள் சரிந்து விழுந்ததால் குடியிருப்பு பகுதியில் வாழ்ந்த 50க்கு மேற்பட்டவர்கள் தோட்டத்திலுள்ள பொது நிலையத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
அதன்பின் இம் மக்களின் பாதுகாப்பு கருதி இந்திய வீடமைப்பு திட்டத்தின் ஊடாக 46 வீடுகள் கட்டப்பட்டு அதில் குடியமர்த்தப்பட்டனர்.
இன்னும் எஞ்சிய 40 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்தும் பாதிப்பான குடியிருப்பு பகுதியில் வாழ்ந்து வருகின்றனர்.
அத்தோடு இரவு நேரங்களில் சிறு பிள்ளைகளை வைத்துக்கொண்டு மழை காலங்களில் உயிர் அச்சத்துடன் வாழ்வதாக இவர்கள் குறிப்பிடுகின்றனர்.
சரிந்து விழுந்த கற்களும் ஆங்காங்கே ஆபத்தான நிலையில் தேங்கி நிற்பதை காணமுடிகிறது.
ஒவ்வொரு நாளும் இரவு பொழுதை மிகவும் அச்சத்துடன் வாழ்வதாகவும், அதிகாரிகள் எவரும் எங்களுடைய பிரச்சினைகளை கவனிப்பதில்லை எனவும், கற்பாறைகள் தொடர்ந்து சரிந்து விழுவதால் உயிர் ஆபத்துகள் ஏற்பட கூடும் எனவும், ஆபத்தான நிலையில் இருக்கும் தமக்கும் வீடுகளை அமைக்கவும், எங்கள் உயிரை பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை முன்வைக்கின்றனர்.