தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், எதிர்பாராத காலநிலையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக இலட்சக்கணக்கான மக்கள் பல அனர்த்தங்களை எதிர்கொண்டுள்ளனர். இம்மக்களுக்காக இரவு பகலாக அயராது செயல்பட்டு வரும் மாவட்ட, பிரதேச செயலகங்கள், பொலிஸ், சுகாதார திணைக்களங்கள், பாதுகாப்பு திணைக்களங்கள் ஆற்றி வரும் சேவைகளுக்கும் முயற்சிகளுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் தமது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொண்டார்.
இந்த அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணம் குறுகிய காலத்தில் விரைவாக வழங்கப்பட வேண்டும். பலர் உணவு, உடைகளை கூட இழந்துள்ளனர். எனவே முறையான வேலைத்திட்டத்தை உடனடியாக முன்னெடுக்க வேண்டும். மாவட்ட செயலகங்களுக்கு மேலதிகமாக 10 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டாலும் அது போதுமானதாக இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
நாடு வங்குரோத்தான வேளை, அனர்த்த முகாமைத்துவ அமைச்சு 2022.05.16 ஆம் திகதி பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கும் சுற்றறிக்கையை வெளியிட்டது. அதன்பிறகு ஏற்பட்ட பொருளாதார சரிவில் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன. இந்த சுற்றறிக்கையின் மூலம் ஒரு நபருக்கு தினசரி சமைத்த உணவுக்கு ரூபா.450, ஒரு நபருக்கு வாரத்திற்கு உலர் உணவுக்காக ரூபா.1350, 2 பேர் கொண்ட குடும்பத்திற்கு ரூபா.1800, 3 பேர் கொண்ட குடும்பத்திற்கு
ரூபா 2100, 4 பேர் கொண்ட குடும்பத்திற்கு ரூபா 2400 மற்றும் 5 பேர் கொண்ட குடும்பத்திற்கு 2,700 ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.
2 பேர் கொண்ட குடும்பத்திற்கு ஒரு நபருக்கு வாரத்திற்கு 900 ரூபாவும், 5 பேர் கொண்ட குடும்பத்திற்கு, ஒருவருக்கு வாரத்திற்கு ரூ.540 ரூபா வீதமே ஒதுக்கப்படுகிறது. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தொகையானது தற்போதைய வாழ்க்கைச் செலவுக்கு பொருந்தாது என்பதால் இதனை உடனடியாக மாற்றியமைக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
நிவாரணங்களை வழங்கும் ஒழுங்கை படிப்படியாக முறையாக மாற்றியமைக்க வேண்டும். முறையான அனர்த்த முகாமைத்துவ வேலைத்திட்டத்தை கொண்டிருந்தாலும், அவை காலத்துக்கு ஏற்றால் போல் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
சுனாமிக்குப் பிறகு கிடைத்த டாப்ளர் ரேடார் கட்டமைப்பை இதுவரை பொருத்த முடியாது போயுள்ளது,
அவசர அனர்த்த சூழ்நிலையில் சுனாமிக்கு பிறகு நமது நாட்டுக்கு ரேடார் சிஸ்டம் கிடைத்தது. இது டாப்ளர் ரேடார் அமைப்பு என்று அழைக்கப்படுகிறது. பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ள பிரகாரம், புதிய டாப்ளர் ரேடார் கட்டமைப்பை நிறுவ சில மாதங்கள் ஆகும். சுனாமியின் பின்னர் கிடைத்த டாப்ளர் ரேடார் அமைப்பு தெனியாய கொங்கல மலையின் உச்சியில் கோபுரத்தை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தை வழங்கியிருந்தும், 2017 ஜூன் 14 வரை அது நிர்மாணிக்கப்படவில்லை. சுனாமியின் பின்னர் கிடைத்த ரேடார் ஒன்றைக் கூட சரிவர பொருத்த முடியாத நாட்டில் நாம் இருப்பதால், இது தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை விடுத்தார்.
மாத்தறை அணை நிரம்பி வழிவதால் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது,
வெள்ளம் மற்றும் அனர்த்தங்களை எதிர்கொள்ள செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி முன்னாயத்த ஏற்பாடுகளை மேற்கொள்ள முடியும். முன்கணிப்பு மாதிரிகள், குறுகிய கால மற்றும் நீண்ட கால முன்னறிவிப்புகள் தொடர்பான தகவல்களுடன் இதை மேம்படுத்தலாம். தற்போது மாத்தறையில் வெள்ள அனர்த்த நிலைமை மோசமாக வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
நில்வளா கங்கை பெருக்கெடுத்து ஓடுவதால் அண்டிய பல தாழ் நில பிரதேசங்கள் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளன. இப்பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வெள்ள அபாயம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன. எனவே இது குறித்து கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்தார்.