அம்பாறை மாவட்டத்தில் தொடரும் அடை மழையினால் மக்களது அன்றாட இயல்பு வாழ்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் விவசாயிகள் பெரும் கவலைக்குள்ளாகியுள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஆரம்பமான மழை இன்று வரையில் இடைவிடாது பெய்து வருகின்ற நிலையில் நீர் நிலைகள் யாவும் நீரால் நிரம்பியுள்ளதுடன் வயல் வெளிகள் முற்றாக வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது.
பெரும்போகத்திற்கான விதைப்பு கடந்த இரு வாரம் முதல் சுறுசுறுப்பாக நடைபெற்று முடிவடைந்த நிலையில் பெய்துவரும் மழையானது நெல்விதைகள் முளைவரும் நிலையை பாதித்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இதேநேரம் பகல் நேரத்தில் பயணிக்கும் வாகனங்களின் முன்விளக்குகள் கூட ஒளிரச் செய்யப்பட்டு பயணிப்பதையும் அவதானிக்க முடிந்தது.
மேலும் பெய்துவரும் அடை மழையால் தாழ்நிலப் பகுதிகளில் உள்ள பல இருப்பிடங்கள் வெள்ளத்தால் சூழும் நிலை ஏற்படும் சந்தர்ப்பங்கள் அதிகமாக உள்ள போதிலும் இதுவரையில் யாரும் இடம்பெயரவில்லை என ஆலையடிவேம்பு பிரதேச செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்தோடு கடலுடன் இணையும் ஆலையடிவேம்பு சின்ன முகத்தவாரம் பகுதி நீர் வடிந்தோடுவதன் பொருட்டு அகழ்ந்து விடுவதற்கான ஆலோசனை இடம்பெற்று வருகின்றன.