அம்பாறை மாவட்டம் இறக்காமம் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் எழுமாற்றாக இடம்பெற்ற அன்டிஜன் பரிசோதனையில் ஒருவருக்கு தொற்று உறுதியானது.

வீதியால் சுகாதார விதிமுறைகளை மீறி பயணித்த விவசாயிகள், கட்டட நிர்மாணத்தொழிலாளர்கள், நடமாடும் வியாபாரிகள் என 62 பேருக்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் ஒருவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

அம்பாறை இறக்காமம் பிரதேச சுகாதாரப் பணிமனையால் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான பல்வேறு செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இறக்காமம் பிரதேசத்தில் கொரோனா தொற்ற காரணமாக இருவர் உயிரிழந்துள்ளதுடன் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இறக்காமம் பிரதேச சுகாதாரவைத்திய அதிகாரி டாக்டர் சுஹறா எல்.சில்வா தெரிவித்துள்ளார்.
இறக்காமமத்தில் கடந்த இரு நாட்களில் 13 பேர் கொரோனா தொற்றக்குள்ளாகியுள்ளனர்.

இதுவரையில் 87 பேர் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இங்கு அதிகரிக்கும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் இறக்காமம் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு, பிரதேச சபை, தமணை பொலிஸார், இராணுவத்தினர் ஆகியோர் இணைந்து கொரோனாத் தொற்றைக் கட்டுப்படுத்துவது தொடர்பான வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை, இறக்காமம் பிரதேச மக்கள் சுகாதாரவிதிமுறைகளை இறுக்கமாக கடைப்பிடிக்குமாறு பிராந்திய சுகாதாரப்பணிமனை பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.