அம்பாறை ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில், போரினால் இடம்பெயர்ந்து, மீண்டும் மீள்குடியமர்த்தப்பட்ட மக்களில், தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு, குடிநீர் மற்றும் மின்சார இணைப்புக்களுக்கான நிதியுதவிகள் அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்றன.
இன்றைய தினம் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் தலைமையில், 109 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்புக்காக தலா 37 ஆயிரம் ரூபாவும் மின்சார இணைப்பினைப் பெற்றுக்கொள்வதற்காக 125 குடும்பங்களுக்கு தலா 45 ஆயிரம் ரூபாவும் வழங்கப்பட்டது.
நகரஅபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் மீள்குடியேற்றதிட்டத்தின் கீழ் மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்தும் வகையில், இவ் உதவித்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. ஆலையடிவேம்பு பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எல்.ஹீசைன்டீன், அக்கரைப்பற்று குடிநீர் வழங்கல் அலுவலகத்தின் பொறுப்பதிகாரி றமீஸ் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டு குடிநீர் மற்றும் மின்சார இணைப்பிற்கான காசோலையினை வழங்கினர்.