அகில இலங்கை பொது மீனவர் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் அம்பாறை மாவட்டம், சாய்ந்தமருது பிரதேச மீனவர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மீன்பிடி படகுகளின் மேல் ஏறி நின்றவாறும், நிலத்தில் நின்று கொண்டும் பதாகைகளை கைகளில் ஏந்தி கோசமிட்டவாறு மீனவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒலுவில் மீன்பிடித்துறை முகத்தினை மூடியுள்ள மண்ணை தோண்டுமாறும், பொருட்களின் விலைவாசியை குறைக்குமாறும், எரிபொருட்களின் விலைகளை குறைக்குமாறும் கோசமிட்டவர்கள் வாழ்க்கைச் செலவு அதிகரித்துக் கொண்டு செல்லுகின்றமையையும் கண்டித்தனர்.
சாய்ந்தமருது பிரதேச மீனவர்களும் கருத்துக்களை தெரிவித்தனர். அவர்கள் தங்களுக்கு ஒலுவில் மீன்பிடித்துறை முகத்தினை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டனர்.
கடற்தொழில் அமைச்சர் உட்பட பலரும் பல தடவை வருகை தந்து வாக்குறுதி அளித்த போதிலும் அதனை அவர்கள் நிறைவேற்றவில்லை என்றும் தெரிவித்தனர்.