அம்பாறை திருக்கோவில் பிரதேச விவசாயிகளின் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் கலந்துரையாடல் திருக்கோவில் பிரதேச செயலகத்தில் இன்று நடைபெற்றது. திருக்கோவில் பிரதேச செயலாளர் தங்கையா கஜேந்திரனின் ஒருங்கமைப்பில், பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தலைமையில் திருக்கோவில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் கலந்துரையாடல் நடைபெற்றது.
திருக்கோவில் பிரதேச விவசாயிகள் நீண்ட காலமாக எதிர் கொண்டு வரும் பிரச்சினைகள் தொடர்பில், இவ்வாண்டு சமர்ப்பிக்கப்படவுள்ள அரசின் வரவு செலவுத் திட்டத்தில் உள்ளீர்ப்பு செய்து அதற்கான தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் விவசாயிகளின் பிரச்சினைகள் ஆராயப்பட்டன. கிழக்கு மாகாண நீர்பாசனத் திணைக்களத்தின் தம்பிலுவில் நீர்பாசனத் திணைக்களம் மற்றும் தம்பிலுவில் கமநல சேவைகள் மத்திய நிலையம் ஆகிய பிரிவுக்குட்பட்ட விவசாய குளங்கள் விவசாயப் பாதைகள் மதகுகள் கால்வாய்கள் போன்றவற்றின் புனரமைப்பு மற்றும் அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடப்பட்டு தீர்மாணங்கள் எட்டப்பட்டன.
உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.அனோஜா, தம்பிலுவில் நீர்ப்பாசனப் எந்திரி கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர், கிராம சேவை நிர்வாக அதிகாரி மற்றும் அரச துறைசார் உத்தியோகத்தர்கள், திருக்கோவில் பிரதேச விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் இதில் கலந்துகொண்டனர்.