அம்பாறை மாவட்டம், பொத்துவில் , அக்கரைப்பற்று , சம்மாந்துறை , நிந்தவுர் , அம்பாறை , இறக்காமம் , நற்பிட்டிமுனை , மத்திய முகாம் ஆகிய இடங்களில் பயிரிடப்பட்ட வேளாண்மை விவசாயிகளினால் நெல் அறுவடை செய்யப்படுகின்றன.
நெல் அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் , விளைச்சல் கடந்த போகங்களை விட குறைவடைந்துள்ளதுடன் நெல்லுக்கான கேள்வி அதி உச்சத்தில் காணப்படுகின்றது.
அறுவடை செய்யப்படும் நெல்லினை கொள்வனவு செய்வதில் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த அரிசி ஆலை உரிமையாளர்களை விட வெளி மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகளும் , அரிசி ஆலை உரிமையாளர்களுமே அதிகளவில் நெல்லினை விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்வனவு செய்வதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
பெரும் போக வேளாண்மைச் செய்கை இரசாயன உரமின்றி சேதனப் பசளையினை பிரயோகித்து செய்கை பண்ணப்பட்டதனால் எதிர்பார்த்த விளைச்சல் கிடைக்கவில்லை என கவலை தெரிவிக்கும் விவசாயிகள் தொடர்ச்சியான மழை காரணமாக அறுவடை இயந்திரங்களை கொண்டு நெல் அறுவடையில் ஈடுபடுவது சிரமமாக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
ஏனைய போகங்களை விட இப்பெரும் போகத்தில் விளைச்சல் குறைவடைந்துள்ளதால் பாரிய நஸ்டத்தினை எதிர்நோக்கியுள்ளதாகவும் அடுத்த சிறுபோகத்தில் மீண்டும் எவ்வாறு நெற்செய்கையில் ஈடுபடுவது என்பது பற்றி பிரதேச விவசாயிகள் பெரும் கவலையினை தெரிவித்தனர்.