கெல்த்தி லங்கா நிறுவனத்தினால், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கான இரண்டு நாள் பயிற்சிப் பட்டறை, கிளிநொச்சியில் நடத்தப்பட்டுள்ளது.
வடக்கு மாகாணத்தில், சமூக மட்டங்களில் இணைந்து செயற்படுகின்ற அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகள் 50 பேருக்கு, இருநாள் செயலமர்வு நடத்தப்பட்டது.
நேற்று ஆரம்பமான முழுநேர பயிற்சி செயலமர்வு, இன்று நிறைவு பெற்றது.
கிளிநொச்சி மாவட்ட செயலக திறன் விருத்தி நிலையத்தில், அரச சார்பாற்ற நிறுவனங்களின் கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர் என்.திருமாறன் தலைமையில், இந்த பயிற்சிப் பட்டறை இடம்பெற்றது.
முதல் நாள் செயலமர்வில், போதைப்பொருள் பாவனையை எவ்வாறு தடுக்கலாம் என்பது தொடர்பில் ஆராயப்பட்டது.கிராமிய மட்ட மற்றும் சிவில் சமூக, அரச சார்பற்ற நிறுவனங்களின், போதைப்பொருள் தடுப்பு செயற்றிட்டத்தை வலுப்படுத்தும் நோக்கில், பயிற்சிப் பட்டறை இடம்பெற்றது.
இதன் போது, கிராமங்களில் போதைப்பொருள் பாவனை அதிகரிப்பதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை, எவ்வாறு சமூகத்திற்கு கொண்டு செல்லுதல் உள்ளிட்ட பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
சமூக மட்டங்களில் உள்ள அமைப்புக்கள், எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்பது தொடர்பாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது.
இன்றைய இரண்டாம் நாள் செயலமர்வில், போதைப்பொருள் பாவனையை குறைத்தல் மற்றும் பால்நிலை சமத்துவம் தொடர்பான வேலைத்திட்டங்களை, கிளிநொச்சி மாவட்டத்தில், அரச சார்பற்ற நிறுவனங்கள் ஊடாக, எவ்வாறு வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்ல முடியும் என்பது தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது.
அத்துடன், ஆண், பெண் சமத்துவ முறைகளை கையாளும் அணுகுமுறைகள் தொடர்பான விளக்கங்களும் வழங்கப்பட்டன.பயிற்சிப் பட்டறையில், கெல்த்தி லங்கா நிறுவனத்தின் முகாமையாளர் சாமிக்க ஜெயசிங்க, வடக்கு கிழக்கு இணைப்பாளர் தே.பிறேம்ராஜ், தலைமைக் காரியாலய அலுவலர்களான ஜனனி மற்றும் சரணி, மொழிபெயர்ப்பாளர் ஜெல்சியா மற்றும் அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகள் பங்கேற்றனர்.