அரச மற்றும் தனியார் ஊழியர்களின் ஊழியர் சேமலாப நிதி விடயத்தில் அரசாங்கம் முன்னெடுக்கவிருந்த பாரிய அநீதி ஐக்கிய மக்கள் சக்தியின் தலையீட்டில் தடுத்து நிறுத்தப்பட்டதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் ஹப்புஹாமி தெரிவித்தார்.
எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (17) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அரச, தனியார் துறை ஊழியர்கள் இந்நாட்டை முன்னோக்கிக் கொண்டுசெல்பவர்கள். அவர்கள் உழைத்து சேமித்த பணத்தில் கைவைப்பதற்கு அரசாங்கம் முயற்சித்தது. எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் தலையீட்டால் அரசாங்கத்தின் முயற்சி கைவிடப்பட்டது.
எமது கட்சியில் உள்ள சகலரும் அதேபோன்று ஏனைய கட்சியிலுள்ளவர்களும் இவ்விடயத்துக்கு தங்களது அழுத்தத்தை கொடுத்தனர். எனவே இவ்விடயம் தொடர்பாக அழுத்தம் கொடுத்த அனைவருக்கும் நாம் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம்.
எனினும் ஊழியர் சேமலாப நிதி விடயத்தில் அனைவரும் அவதானத்துடன் இருக்க வேண்டும் ஏனெனில் ஏதேனும் ஓர் இடத்தில் அநீதி இழைக்கப்படலாம்.
சமுர்த்தி விடயத்திலும் இவ்வாறான ஒரு அநீதியே இழைக்கப்பட்டுள்ளது. இதனால் சமுர்த்தி சார்ந்த அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஏதேனும் ஒரு நிதியை கண்டால் அதனை கையகப்படுத்தும்வரை நித்திரைக்கு செல்லாத அரசாங்கமே தற்போது ஆட்சியில் உள்ளது.