அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் நிர்வாகத்தினருக்கு முறையான பாதுகாப்பும் வசதிகளும் வழங்குதல் தொடர்பில் விசாரணை அறிக்கை வழங்குமாறு அறிவித்து சுகாதார அமைச்சின் செயலாளர் மூவரடங்கிய குழுவொன்றை நியமித்துள்ளார்.
இந்நிலையில் நாளை காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை மூன்று மணித்தியால பகிஷ்கரிப்பில் ஈடுபடுவதற்கு அரச தாதியர் சங்கம் தீர்மானித்துள்ளது. பதவியுயர்வு வழங்கப்படாமை மற்றும் சம்பள குறைப்பு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன் வைத்து இந்த பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளது.
அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் நிர்வாகத்தினருக்கு உரியப் பாதுகாப்பு மற்றும் வசதிகளை வழங்குதல் தொடர்பில் விசாரணை அறிக்கை ஒன்றை வழங்குவதற்காகச் சுகாதார அமைச்சின் செயலாளர் வடமேல் மாகாண சுகாதார சேவை பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் எம். கே. சம்பத் இந்திக குமார உள்ளிட்ட மூவரடங்கிய குழுவொன்றை நியமித்துள்ளது.
அந்த அறிக்கை இம்மாதம் 24 ஆம் திகதிக்கு முன்னர் அமைச்சின் செயலாளருக்கு வழங்குமாறு அமைச்சு அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.அத்துடன் அரச தாதியர் சங்கம் நாளை காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை 3 மணி நேரத்திற்கு தமது சேவையிலிருந்து விலகுவதற்குத் தீர்மானித்துள்ளதாக அரச தாதியர் சங்கத்தின் அழைப்பாளர் சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளார்.
நோயாளர்களைப் பணயம் வைத்து, நோயாளிகளை அசௌகரியத்திற்கு உள்ளாக்கும் வகையில், சுகாதார சேவையை குறை மதிப்பிற்கு உட்படுத்தும் வகையில் யாரேனும் செயற்பட்டால் மக்களின் பக்கம் இருந்து அதற்கான தீர்மானங்களை எடுப்பதற்கு அரசாங்கம் கடமைப்பட்டுள்ளதாகவும், இந்த நோக்கத்திற்காகத் தயங்காமல் நடவடிக்கை எடுப்பதாகவும் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
சுகாதார தொழிற்சங்கத்தினருடன் கலந்துரையாடித் தீர்வை பெற்றுக் கொள்ள முடியாத சிக்கல்கள், பிரச்சினைகள் ஏதும் இல்லை எனவும் அதற்காக அரசாங்கம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அர்ப்பணிப்பதற்குத் தயாராகவுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.