அவசர உச்சி மாநாடொன்றை நடத்த ஐரோப்பியத் தலைவர்கள் தீர்மானம்!

0
10

யுக்ரேன் யுத்தம் குறித்து ஐரோப்பியத் தலைவர்கள் அடுத்த வாரம் அவசர உச்சி மாநாடொன்றை நடத்தத் தீர்மானித்துள்ளனர்.பாரிசில் நடைபெறவுள்ள இந்த மாநாடு தேசிய பாதுகாப்பு குறித்து நாடுகள் மிகவும் அரிதாக மேற்கொள்ளப்படும் சந்திப்பென தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் ஐரோப்பிய நாடுகள் நேட்டோவில் அதிக பங்களிப்பை மேற்கொள்ள வேண்டும் எனவும் பிரித்தானியப் பிரதமர் கியர் ஸ்ராமர் வலியுறுத்தியுள்ளார்.

யுக்ரேனுக்கான அமெரிக்க ஜனாதிபதியின் விசேட தூதுவர் யுத்தத்தை முடிவிற்குக் கொண்டு வருவது தொடர்பாக அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையேயான எந்தவொரு பேச்சுவார்த்தைகளிலும் ஐரோப்பியத் தலைவர்கள் பங்குகொள்ளமாட்டார்கள் என தெரிவித்த நிலையில் பாரிஸ் உச்சி மாநாடு நடைபெறவுள்ளது.

அதேவேளை அமெரிக்க வெளிவிவகாரத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ உட்பட சிரேஷ்ட வெள்ளை மாளிகை அதிகாரிகள் எதிர்வரும் நாட்களில் சவுதி அரேபியாவில் ரஷ்ய மற்றும் யுக்ரேன் பேச்சுவார்த்தையாளர்களை சந்திக்கவுள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

இந்தநிலையில் மாத இறுதியில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை வெள்ளை மாளிகையில் பிரித்தானியப் பிரதமர் சந்திக்கும் போது ஐரோப்பியத் தலைவர்களின் கருத்துக்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தவிர யுக்ரேன் ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கியுடன் ஐரோப்பிய தலைவர்கள் பிறிதொரு சந்திப்பை மேற்கொள்வார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.