மன்னார் மாவட்டம் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சோழமண்டல குளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள இடப்பெயர்களின் தன்மைக்கேற்ப, சோழர்களாலும் அதற்கு முந்தைய காலத்தில் பண்டைய தமிழர்களாலும் ஆட்சி செய்யப்பட்டு வந்திருக்கலாம் எனும் சந்தேகத்தின் அடிப்படையில் அப்பகுதியின் சில முக்கியமான இடங்களில் தொல்லியல் தொடர்பான கள ஆய்வு, பேராசிரியர் ப.புஸ்பரட்ணம் தலைமையில் நேற்று முன்னெடுக்கப்பட்டது.
மன்னார் மாவட்டச் செயலாளர் க.கனகேஸ்வரனின் ஒழுங்கமைப்பிலும் மன்னார் மாவட்ட உதவி அரசாங்க அதிபர் மா.ஸ்ரீஸ்கந்தகுமாரின் தலைமையிலும் மன்னார் சட்டத்தரணி செல்வராஜா டினேசனின் வழி நடத்தலிலும் இந்த கள ஆய்வு முன்னெடுக்கப்பட்டது. இந்த கள ஆய்வின் போது தமிழர்களின் வாழ்வியல் தொடர்பான பல விதமான சட்டி, பானை, ஓட்டுத் தண்டுகள் சேட் எனப்படும் கல் இரும்புத் தாது பெறக்கூடிய கற்கள் போன்ற பல சான்றுப் பொருட்கள் நிலத்தின் மேல் பகுதியில் மேலதிக ஆய்வுகளுக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.
இந்த தொல்லியல் கள ஆய்வில் முன்னாள் தொல்லியல் துறை விரிவுரையாளர் கந்தசாமி கிரிகரன் மன்னார் ஊடகவியலாளர் ஜெகன் மற்றும் இலுப்பைக்கடவை கிராமத்தைச் சார்ந்த பலரும் கலந்து கொண்டனர். இந்த தொல்லியல் கள ஆய்வு தொடர்பாக பேராசிரியர் புஸ்பரட்ணம் இவ்வாறு கருத்து வெளியிட்டார்.
இந்தப் பிரதேசமானது இலங்கையின் ஏனைய பிரதேசங்களை விட ஒரு பல்லின சமூகம் வாழ்ந்து கொண்டிருந்த இடம் என்பதை என்னால் அடையாளப்படுத்தக் கூடியதாக இருந்தது. இங்கே பறங்கியர் குளம் பறங்கிய காமம் காணப்படுகிறது. இவை 16ஆம் நூற்றாண்டில் போர்த்துக்கேயர் வட இலங்கை மீது படையெடுத்த போது மன்னார் மாவட்டம் அவர்களுடைய முதல் ஆதிக்கத்திற்கு விழுந்த இடம். அதன் விளைவாக இந்த சமூகம் ஒன்று எங்கே குடியேறி இருந்திருக்க வேண்டும். அதே நேரத்தில் இங்கிருந்த நெல், யானை மற்றும் யானை தந்தத்தங்களை பெறுவது போர்த்துக்கேயரின் ஒரு நோக்கமாக இருந்தது. இதனால் அவர்களுடைய ஆதிக்கம் இங்கு இருந்ததை அடையாளப்படுத்தக் கூடியதாக உள்ளது.
அதற்கு அப்பால் பல்வேறு குளங்கள் சோழமண்டலக் குளத்தைச் சுற்றி வட்டாரத்தில் இருப்பதை எம்மால் அறிந்து கொள்ள முடிந்தது. 2000 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தப் பிரதேசம் மக்கள் குடியிருப்புகளாக இருந்தது என்பதை உறுதிப்படுத்தக் கூடிய பல வகையான வடிவங்களில் அமைந்த மண்பாண்ட ஓடுகள் எம்மால் கண்டுபிடிக்க கூடியதாக இருந்தது. எப்படி அனுராதபுரத்தில் ஒரு தொன்மையான நாகரீகம் உருவாகி வளர்வதற்கு மல்வத்து ஓயா ஒரு காரணமாக இருந்திருக்கின்றதோ இந்தப் பிரதேசத்திலே தொன்மையான நாகரீகம் உருவாகுவதற்கு பறங்கியரும் ஒரு முக்கிய காரணமாக அமையலாம் என்பது என்னுடைய கருத்து. இந்தக் கருத்தை நாம் மேலும் உறுதிப்படுத்துவதற்கு இந்தப் பிரதேசத்தில் சில அகழ்வாய்வுகள் மேற்கொள்ள வேண்டி இருக்கிறது என பேராசிரியர் புஸ்பரட்ணம் தெரிவித்துள்ளார்.