இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 61 இலங்கையர்கள் கைது

0
289

இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 61 இலங்கையர்கள் நேற்று(11) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

ஆட்கடத்தலுடன் தொடர்புடையவர்களைக் கைதுசெய்வதற்காக இந்தியா தமிழ்நாடு, கர்நாடகப் பொலிஸார் இணைந்து மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது ஆட்கடத்தலுடன் தொடர்புடைய 7 இந்தியர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று கர்நாடகா மங்களுரு நகர பொலிஸ் ஆணையாளர் என்.சசிகுமார் தெரிவித்துள்ளார்.

கைதுசெய்யப்பட்ட இலங்கையர்கள், சுமார் இரண்டு மாதங்களுக்கும் மேலாக தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய பிரதேசங்களில் தங்கியிருந்துள்ளனர் என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

38 பேர் கர்நாடகா, மங்களுர் பிரதேசத்திலிருந்தும் 23 பேர் தமிழ்நாடு மதுரையிலிருந்தும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் கடல்மார்க்கமாக கனடாவுக்குச் செல்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோதே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்கள் ஏழு பேரில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புடைய ஒருவரும் உள்ளடங்குவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.