இந்தியா, இலங்கையின் அனைத்து முயற்சிகளிலும் உண்மையான நண்பனாக இருக்கும் – இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர்

0
7

இந்தியா, நிபந்தனையற்ற உறுதியான அண்டை நாடாகவும், இலங்கையின் அனைத்து முயற்சிகளிலும் உண்மையான நண்பனாகவும் இருந்திருக்கின்றது, எப்போதும் இருக்கும் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற தேசிய பொங்கல் நிகழ்வில் உரையாற்றும்போது அவர் இதனைத் தெரிவித்தார்.

இலங்கையின் நகர அபிவிருத்தி நிர்மாண மற்றும் வீடமைப்பு அமைச்சலுடன் இணைந்து நேற்று, திருவள்ளுவர் குடியிருப்பு மாதிரி கிராமத்தை மாவட்டத்தில் 24 குடும்பங்களுக்கு வீட்டுவசதிகள் வழங்கி திறந்து வைத்தேன்.

இன்று காலை புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர், கடற்றொழில் அமைச்சருடன் இணைந்து யாழில் 11 மில்லியன் அமெரிக்க டொலருக்கு மேல் இந்திய நிதி உதவியில் நிர்மாணிக்கப்பட்ட கலாசார மத்திய நிலையத்திற்கு திருவள்ளுவர் கலாசார மையம் என்ற பெயர் சூட்டும் நிகழ்வில் கலந்துகொண்டேன்.

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான கலாசார மற்றும் வரலாற்று பிணைப்புக்கள் ஆளமானவை மற்றும் நீடித்தவை. இந்த உறவுகள் மொழி இலக்கியம் மதம் கலை கட்டடக் கலை மற்றும் சமய மரபுகள் போன்ற நமது பாரம்பரியம் ஒவ்வொரு விடயத்திலும் ஊடுருவி ஒன்றோடு ஒன்று இணைந்து ஒரு வளமான பிணைப்பை உருவாக்குகின்றது.

இந்த ஆளமான பிணைப்புகள் தேவைப்படும் காலங்களில் இந்தியா இலங்கைக்கு வழங்கிய உறுதியான ஆதரவுகள் மூலம் வெளிப்படுத்தப்படுகிறது. குறிப்பாக நெருக்கடியான தருணங்களில் இலங்கைக்கு இந்தியாவின் அசைக்கமுடியாத ஒற்றுமை இந்த நீடித்த நட்புக்கு ஒரு சான்றாகும்.

இந்திய அரசால் வழங்கப்பட்ட வீடமைப்பு திட்டங்கள் மற்றும் வாழ்வாதார திட்டங்கள் போன்ற முன்முயற்சிகள் பாதிக்கப்பட்ட சமூகங்களை மேம்படுத்துவதில் முக்கிய பங்குவகிக்கின்றன.

கொவிட் தொற்று நோய்களின் போது இந்தியா உடனடி பொருளாதார மற்றும் மருத்துவ உதவிகளை வழங்கியது.

அதனைத் தொடர்ந்து இலங்கையின் பொருளாதார மீட்சியின் போது முக்கியமான ஆதரவை வழங்கியது.

இந்த நல்லெண்ண செயல்கள் நமது நாடுகளிடையே நீடிக்கும் கூட்டுறவையும் பரஸ்பர மரியாதையையும் எடுத்துக்காட்டுகின்றது.

மேலும் கலை கலாசார மற்றும் மதப் பரிமாற்ங்களிலும் இந்தியா தொடர்ந்து வெற்றி பெற்று நம்மை ஒன்றிணைக்கும் வரலாற்று பிணைப்புக்களை மேலும் வலுப்படுத்துகிறது.

‘இந்தியா, நிபந்தனையற்ற உறுதியான அண்டை நாடாகவும், இலங்கையின் அனைத்து முயற்சிகளிலும் உண்மையான நண்பனாகவும் இருந்திருக்கின்றது, எப்போதும் இருக்கும்’ வருங்காலங்களில் நமது நாடுகளிடையேயான உறவுகள் மேலும் வலுவாக வளரட்டும். என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, தெரிவித்துள்ளார்.

தேசிய பொங்கல் விழா யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்றது. யாழ்ப்பாணம் தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலயத்தில் இன்று காலை ஆரம்பமாகி நடைபெற்றது.

புத்தசாசன மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனெவி தலைமையில் தேசிய பொங்கல் விழா நடைபெற்றது.
தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலயத்தில் பாரம்பரிய முறைப்படி பொங்கல் இடம்பெற்றது.

தொடர்ந்து ஆன்மீக விழிப்புணர்வு நடைபவனி இடம்பெற்றது. குறித்த நடைபவனி தெல்லிப்பளை யூனியன் கல்லூரி வரை இடம்பெற்றது.

விருந்தினர்கள் தெல்லிப்பழை யூனியன் கல்லூரிக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு கலை நிகழ்வுகள் இடம்பெற்றன.

பாரம்பரிய மானாட்டம், மயிலாட்டம், சிலம்பாட்டம், பொய்க்கால் நடனம், குதிரையாட்டம், ஒயிலாட்டம் ஆகியவற்றுடன் விருந்தினர்கள் அழைத்து செல்லப்பட்டனர்.

நிகழ்வில் அமைச்சர்களான சரோஜா சாவித்திரி போல்ராஜ், ஹினிதும சுனில் செனவி, இ.சந்திரசேகர், பிரதி அமைச்சர் பிரதீப், வடக்கு மாகாண ஆளுநர் ந.வேதநாயகன், தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், தெல்லிப்பழை துர்க்காதேவி அம்மன் தேவஸ்தானத்தின் தலைவர் ஆறு திருமுருகன் மற்றும் மதகுருமார்கள் மற்றும் கலை கலாசார துறைசார்ந்தவர்கள், வடக்கு மாகாண செயலாளர், யாழ் மாவட்ட பதில் அரசாங்க அதிபர், மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.