ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியப் பயணத்தை முடித்து நாடு திரும்பியுள்ள நிலையில், தமிழ் எம்.பிக்களுடன் இலங்கைக்கான இந்திய தூதுவர் அவசர சந்திப்பொன்றை நடத்தவுள்ளார்.
இரா.சம்பந்தன் உட்பட நாடாளுமன்ற உறுப்பினர்கள் 10 பேர் இச்சந்திப்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.
இன்று முற்பகல் 10.30 மணியளவில் கொழும்பில் உள்ள இந்திய இல்லத்தில் இச்சந்திப்பு இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இந்தியப் பயணத்தின் போதான உறுதிமொழிகள், 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் நடத்திய சர்வகட்சிக் கூட்டம் என்பன தொடர்பில் இதன்போது ஆராயப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
அதேவேளை, இந்தியப் பிரதமருடன் பேச்சு நடத்துவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதற்கான ஏற்பாடுகள் பற்றியும் கலந்துரையாடப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.