வெள்ளைப் பூரான் கடிப்பதால் ஏற்படும் விஷம், உயிர் ஆபத்தை ஏற்படுத்துவதில்லை, எனினும் வெள்ளைப் பூரான் தொடர்பில் அவதானம் தேவை என மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார்.
அண்மையில் வெள்ளைப் பூரான் கடித்த சிறு குழந்தை ஒன்று வைத்தியசாலையில் அனுமதிக்க தாமதமாகியமையால் உயிரிழந்ததாகவும்,
மற்றொரு குழந்தை ஆபத்தான நிலையில் உள்ளது எனவும் தெரிவித்த சுகாதார சேவைகள் பணிப்பாளர் இதன் விஷம் நரம்பு, இதயம், சிறுநீரகம், குருதி என்பவற்றில் பாதிப்புகளை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தின் வலி வடக்கு, கிழக்கு பகுதிகளில் அதிக அளவில் கண்டறியப்பட்ட இந்த உயிரினம் முதன் முறையாக நானாட்டான், வங்காலை பகுதிகளில் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதாகவும், வெள்ளைப் பூரான் அல்லது இனந்தெரியாத ஜந்துகளால் கடியுண்டவர்களை தாமதிக்காமல் அருகில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிப்பதன் மூலம் உயிரிழப்புகளை தவிர்த்துக்கொள்ள முடியும் எனவும் மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார்.