இன்று காலை நான்கு அலுவலக ரயில்கள் இரத்து செய்யப்பட்டதாக இலங்கை ரயில்வே தெரிவித்துள்ளது.ஞாயிற்றுக்கிழமை முதல் என்ஜின் சாரதிகள் குழுவினால் முன்னெடுக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு நேற்று வாபஸ் பெறப்பட்டது.இருப்பினும், இன்று காலை நான்கு ரயில் பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.ஒகஸ்ட் முதலாம் திகதி முதல் ஆறு புதிய ரயில் சேவைகளை அறிமுகப்படுத்துவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, என்ஜின் சாரதிகள் குழுவொன்று ஞாயிற்றுக்கிழமை முன்னறிவிப்பின்றி வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்தது.ஏற்கனவே பணியாளர்கள் பற்றாக்குறை உள்ள நேரத்தில் புதிய ரயில் பயணங்களை அறிமுகப்படுத்துவது சாத்தியமில்லை என என்ஜின் சாரதிகள் கருதுகின்றனர்.வேலைநிறுத்தம் காரணமாக ஞாயிற்றுக்கிழமை சுமார் 21 ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டன, நேற்று 65 ரயில் பயணங்கள் இரத்து செய்யப்பட்டன, ஆனால் தொழிற்சங்க உறுப்பினர்கள் வேலைநிறுத்தத்தை பிற்பகல் 3 மணியளவில் வாபஸ் பெற்றனர்.இதேவேளை, எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாதிருக்க கடுமையான தீர்மானங்கள் எடுக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.திடீர் வேலைநிறுத்தம் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமல், ஊழியர்கள் பிரச்சினைகள் தொடர்பில் முதலில் அதிகாரிகளிடம் கலந்துரையாடப்படும் என போக்குவரத்து அமைச்சர் தெரிவித்தார்.ரயில்வே ஊழியர்கள் தங்களுடைய குறைகள் கேட்கப்படவில்லை என கருதினால், அவர்கள் எப்போதும் போக்குவரத்து அமைச்சின் செயலாளருடன் சந்திப்பை நாடலாம் அல்லது அவரை நேரடியாக தொடர்பு கொள்ளலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.புகையிரத ஊழியர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையில் கருத்து வேறுபாடு காரணமாக பொதுமக்கள் அசெளகரியங்களுக்கு உள்ளாவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.