20வது திருத்தத்தில் இடம்பெற்றுள்ள இரட்டை பிரஜாவுரிமை உட்பட நான்கு விடயங்கள் குறித்து உதயகம்மன்பிலவின் பிவித்துரு ஹெல உறுமய கட்சி அதிருப்தி வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவிற்கு எழுதியுள்ள கடிதத்தில் கட்சி பிவித்துரு ஹெல உறுமய 20வது திருத்தம் குறித்த தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளது.
97 வீதமான மக்கள் குடியேற்றவாசிகளாக காணப்படும் அவுஸ்திரேலியாவில் கூடஇரட்டை பிரஜாவுரிமை உள்ளவர்கள் அரசியல் பதவிகளை வகிக்கமுடியாது என ஜனாதிபதிக்கான கடிதத்தில் பிவித்துரு ஹெல உறுமய தெரிவித்துள்ளது.
பல நாடுகள் அந்த கொள்கையை பின்பற்றுகின்றன என தெரிவித்துள்ள பிவித்துரு ஹெல உறுமய இரட்டை பிரஜாவுரிமை தொடர்பான கட்டுப்பாடுகளை முன்னைய அரசாங்கம் ராஜபக்ச குடும்பத்தினை இலக்குவைத்தே நிறைவேற்றியது எனினும் நாங்கள் அது முன்னேற்றகரமான நடவடிக்கை என கருதுகின்றோம் என தெரிவித்துள்ளது.
இரட்டை பிரஜாவுரிமை உள்ள ஒருவர் அரசியல் பதவிக்கு நியமிக்கப்பட்டால் நாட்டை பாதிக்கும் விடயங்கள் குறித்து பக்கச்சார்பற்ற விதத்தில் அவரால் எவ்வாறு நடந்துகொள்ள முடியும் என்ற சந்தேகம் மக்களுக்கு எழும் எனவும் பிவித்துரு ஹெல உறுமய தெரிவித்துள்ளது.
வர்த்தமானியில் அறிவிக்காமல் அவசரகால சட்டங்களை நிறைவேற்றுவதை ஏற்கவில்லை என தெரிவித்துள்ள பிவித்துரு ஹெல உறுமய இது குறிப்;பிட்ட சட்டம் தொடர்பாக கருத்து தெரிவிப்பதற்கு மக்களுக்கு உள்ள உரிமையை மீறும் எனவும் தெரிவித்துள்ளது.
கணக்காய்வாளர் நாயகத்திற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை 20வது திருத்தத்தின் மூலம் பறிக்ககூடாது எனவும் பிவித்துரு ஹெல உறுமய குறிப்பிட்டுள்ளது.