பொல்பித்திகமை பகுதியில் இராணுவச் சிப்பாய் என்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் என்றும் குறிப்பிட்டு பல மோசடி செயல்பாடுகளில் ஈடுபட்ட சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு ஒலிப்பதிவொன்றை வெளியிட்டுள்ள அவர் அதில் மேலும் தெரிவித்தவை வருமாறு:
பொல்பித்திகமை பகுதியில் இராணுவச் சிப்பாய் என்றும், புலனாய்வுப் பிரிவின் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்கள் என்றும் தங்களை போலியான முறையில் அடையாளப்படுத்தி மோசடிகளில் ஈடுபட்ட இருவரை பொலிஸார் கைதுசெய்தனர்.
இந்த சந்தேகநபர்கள் இவ்வாறு போலியான முறையில் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு, அந்தப் பகுதிகளில் பல மோசடிகளைச் செய்து வந்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் என்று தன்னை அடையாளப் படுத்திக்கொண்ட 47 வயது நபர் வாரியபொல பகுதியைச் சேர்ந்தவர் என்றும், மற்றைய நபர் மாஹவ பகுதியைச் சேர்ந்தவர் என்றும் விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது.
பொலிஸ் உத்தியோகத்தர் என்று தன்னை அடையாளப் படுத்திக்கொண்ட நபர், பொலிஸ் உடையில் புகைப்படம் ஒன்றையும் வைத்துக்கொண்டுள்ளதுடன், அதனைக் காண்பித்து இவ்வாறு மோசடியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இந்த நபர்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொல்பித்திகமை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர் எனத் தெரிவித்தார்.