இலங்கையிலிருந்து சுற்றுலா விசாவில் அழைத்துச் செல்லப்படும் பெண்களை டுபாயில் அடிமைகளாக விற்கும் அவலம்!

0
329

இலங்கையிலிருந்து டுபாய் நாட்டுக்கு சுற்றுலா விசாவில் அழைத்துச் செல்லப்பட்டு, அங்கிருந்து ஓமான் நாட்டில் தாங்கள் அடிமைகளாக விற்கப்பட்டுள்ளதாக தெரிவித்து தங்களை மீட்குமாறு 150 பெண்கள் அபயம் கோரியுள்ளனர். வீட்டுப் பணிப்பெண்களாக உள்ள அவர்கள் அனுப்பி வைத்துள்ள காணொலிகளிலேயே அவர்கள் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளனர். இவ்வாறு கோரிக்கை விடுத்தவர்களில் தமிழ், முஸ்லிம், சிங்கள பெண்கள் அடங்குவர். அவர்கள் விடுத்த கோரிக்கையில், இலங்கையிலுள்ள முகவரும் இங்கே ஓமான் நாட்டிலுள்ள முகவரும் எங்களை ஏமாற்றி சுற்றுலா வீசாவில் அழைத்து வந்து எங்களை இங்கே ஓமானில் விற்று விட்டார்கள். இதனால் நாங்கள் இப்போது அடிமைகளாக இங்கே அகப்பட்டுக் கொண்டுள்ளோம். இந்த முகவர்கள், எங்கள் ஒவ்வொருவர் சார்பாகவும் சுமார் 18 இலட்சம் ரூபாயை வாங்கிக் கொண்டே எங்களை அடிமைகளாக விற்றிருக்கிறார்கள். கையில் கடவுச்சீட்டும் இல்லை. அதனையும் பறித்துக் கொண்டார்கள். இதனால் நாங்கள் எங்களது நாட்டுக்குத் திரும்ப முடியாதுள்ளது. தொடர்பாடல் எதுவுமே இல்லாமல் தொடர்பு கொள்ளக்கூடிய கைபேசிகள் இல்லாமல் நாம் உள்ளோம் சம்பளமும் இல்லை. சாப்பாட்டுக்கு வழியில்லை. சவர்க்காரம் வாங்கக் வாங்கக்கூட கையில் காசு இல்லை. நாங்கள் பரம ஏழைகள் என்றபடியால்தான் இங்கு வீட்டுப் பணிப்பெண்களாக வந்தோம். நாங்கள் அனைவரும் பெண்கள். இங்கே சுகாதார வசதிகளும் பாதுகாப்பும் அற்ற சூழ்நிலையில் தங்க வைக்கப்பட்டுள்ளதால் நாங்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளோம். மாற்றிக் கொள்ள ஆடைகள் கூட இல்லாது அவஸ்தைப்படுகின்றோம் எமது விடயத்தில், மனித உரிமைகள் அமைப்புகள், பெண் உரிமை அமைப்புக்கள் இந்த மோசடியை உடனடியாக நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் தலையிட்டு எமக்கு கருணை காட்ட வேண்டும் என தெரிவித்துள்ளனர்.